ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மறுமலர்ச்சி தி.மு.க‘ பொதுச் செயலாளர், வைகோ வாழ்த்து!!
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மறுமலர்ச்சி தி.மு.க‘ பொதுச் செயலாளர், வைகோ வாழ்த்து!!
சென்னை 01 ஜனவரி 2024 பனிக் காலம் வந்தால், வசந்த காலம் வராமலா போகும்” ஒரு ஆங்கிலக் கவிஞனின் கவிதை இது.
கடந்துபோன 2023 ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் இயற்கையின் கோர தாண்டவம் தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது.
தமிழ்நாட்டில், சென்னையிலும், அதனை ஒட்டியுள்ள நான்கு மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களிலும் மழையும் வெள்ளமும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை துன்ப இருளில் தள்ளிவிட்டன.
இந்திய உபகண்டத்திற்கே வழிகாட்டக் கூடிய திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைச் செய்து வருகிறது.
இலங்கைத் தீவை வளைத்து, தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கீழே கொண்டுவந்து அநீதி விளைவிப்பதற்கு சீன அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு சிங்களச் சிறைகளில் அடைக்கப்படுவதும் தொடர்கதையாகி விட்டது. இதைத் தடுப்பதற்கு நரேந்திர மோடியின் அரசு சிறு துரும்பைக்கூட தூக்கிப்போடவில்லை.
ஈழத்தமிழர் இனப்படுகொலை நடத்தப்பட்டதன் தொடர்ச்சி இன்னமும் நின்றபாடில்லை. சிங்களவரின் அடிமை நுகத்தடியிலிருந்து தமிழர்கள் விடுபடவும், சுதந்திரமான தமிழீழம் அமையவும், சிங்களவர் நடத்திய இனக்கொலைக்கு உரிய பன்னாட்டு விசாரணை நடைபெறவும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உலகெங்கும் உள்ள தமிழர்கள் 2024 உதயத்தில் சபதம் ஏற்போம்.
இந்திய உபகண்டத்தில், ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு இந்துத்துவா சக்திகளின் எடுபிடியாக ஆட்சி நடத்துகிறது.
கடந்த ஆண்டு காஷ்மீரைப் பலியிட்டார்கள். மதச்சார்பற்ற நாடு என்ற கோட்பாட்டினைச் சிதைத்து, இந்துத்துவாவின் நச்சுக் கருத்துக்களை சட்டங்களாக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முனைகிறது.
மலரப் போகிற 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணியில் நின்று ஏற்படுத்தியுள்ள ‘இந்தியா’ கூட்டணி புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஜனநாயகம் வழங்கியுள்ள வலிமையான ஆயுதமான வாக்குச் சீட்டை பணத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் பலியாக்கிடாமலும், வாக்குச் சாவடிகளுக்கு வராமலும் ஒதுங்கிக் கொள்ளும் தவறுக்கு இடம் கொடுக்காமலும் மக்கள் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத்தில் உள்ள இடதுசாரி ஜனநாயக சக்திகள் முனைந்து நின்று இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கின்ற அரசாக ஒன்றிய அரசு அமைய வேண்டும்.
விவசாயிகளையும், சிறு குறு நிறுவனங்களையும், தமிழக மீனவர்களையும் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் மத்தியில் ஒன்றிய அரசை இந்தியா கூட்டணி அமைக்கும் என்ற நிலையை உருவாக்க நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கான உறுதி எடுத்துக்கொண்டு, இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்போம்; கூட்டாட்சிக் கொள்கையைக் காப்போம்; மதச்சார்பின்மையைக் காப்போம் என சூளுரைத்து அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.