நடிகை குஷ்பூ, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ‘சேரி’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது!!
நடிகை குஷ்பூ, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ‘சேரி’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது!!
சென்னை 27 நவம்பர் 2023 ‘சேரி’ என்ற சொல்லை அவர் குறிப்பிட்ட விதம் ‘இழிவான’ விதத்தில் இருந்தது என்பது தான் அதை எதிர்ப்பவர்களின் வாதம்.
அதைவிட, ‘சேரி’ (Cheri) என்பதற்கு பிரெஞ்சு மொழியில் `அன்புள்ள` என்றுதான் பொருள், அதைத்தான் நகைச்சுவையாகக் குறிப்பிட்டதாகவும் குஷ்பூ விளக்கம் தந்திருந்தார்.
`வேளச்சேரி`, `செம்மஞ்சேரி` போன்ற வார்த்தைகள் அரசு பதிவுகளிலேயே இருப்பதாகவும் தன்னுடைய பதிவுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்பதும் குஷ்பூவின் வாதமாக உள்ளது.
உண்மையில் `சேரி` என்ற வார்த்தையின் ஆதி என்ன? அதுவொரு இழிச்சொல்லா? நற்சொல் என்றால், ஏன் அதுவொரு இழிவான சொல்லாகப் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது?
வரலாற்று ரீதியில் அந்த வார்த்தையை எதற்காகப் பயன்படுத்தினர்?
இந்தக் கேள்விகளுக்கான விடையை இங்கு விரிவாகப் பார்ப்போம்.
சேரி` என்ற சொல் சமூக- பொருளாதார காரணிகளில் பின்தங்கியவர்கள் வசிக்கும் இடங்களைக் குறிப்பதாக சமகாலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதை எந்த இடத்தில், எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து அதன் அர்த்தமும் மாறுகிறது.
குஷ்பூ `சேரி` எனக் குறிப்பிட்டதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், தலித்திய ஆதரவாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் `சேரி` என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிப்பதாக இருப்பதால், அவர்களை குஷ்பு `இழிவுபடுத்திவிட்டதாக` அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சேரி என்றால் என்ன?
பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் `கூடிவாழும் இடம்` என்ற பொருளைக் கொண்டதாகவே `சேரி` என்ற சொல் தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
சோழர் காலத்தில்தான், அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் வசிக்கும் இடங்களைக் குறிக்கும் விதமாக மாறியது என்பதே தமிழ் அறிஞர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் நமக்குத் தரும் விளக்கமாக உள்ளது
முதன்முதலில் சோழர்கள் காலத்தில் ‘தீண்டாச்சேரி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுகளிலும் அதுபற்றிய குறிப்புகள் உள்ளன. சோழர்கள் காலத்தில் (குறிப்பாக, கி.பி. 12ஆம் நூற்றாண்டு) ‘தீண்டாச்சேரி’யில் வாழ்பவர்களை கிணறு வெட்டுதல், விவசாயம் உள்ளிட்ட பணிகளில் அமர்த்தக்கூடாது என்ற விதிகள் இருந்திருக்கின்றன.
அதாவது, தண்ணீர், உணவு போன்றவை சார்ந்த தொழில்களில் தீண்டாச்சேரியில் இருப்பவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற விதிகள் இருந்திருக்கின்றன.
பெரியபுராணத்திலும் ‘தீண்டாச்சேரி’ என்ற வார்த்தை, நந்தனார் குறித்துக் குறிப்பிடப்படும் இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பக்தி இலக்கியங்கள் பலவற்றில் ‘சேரி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சோழர் காலத்தில்தான் மக்களை அவர்கள் சார்ந்த பிரிவு அல்லது தொழிலின் அடிப்படையில் வெவ்வெறு படிநிலைகளாகப் பிரித்ததாகவும் அதில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இடமாக `சேரி` இருந்ததாகவும் முனைவர் முத்து வெ. பிரகாஷ் கூறுகிறார்
சேரி என்பது மக்கள் கூடி வாழும் இடம். சோழர் காலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் விதமாக இந்தச் சொல் மாறியுள்ளது. ராஜராஜ சோழன் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் நிர்வாக ரீதியாக ஒரு ஊரை வெவ்வேறு படிநிலைகளாகப் பிரித்தனர்.
கோவிலை மையமாக வைத்துதான் ஊர் உருவாகும். கோவிலை சுற்றித்தான் தெருக்கள் பின்னப்படும். அப்படி, ‘சேரி’ என்பது சமூக படிநிலையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் இருக்கும் இடமாக கால மாற்றம் அடைந்தது,” என்கிறார் முத்து வெ. பிரகாஷ்.
வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், சிந்து சமவெளி நாகரிகத்திலும் இத்தகைய பகுப்புகள் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது, முத்து வெ. பிரகாஷின் கூற்றுக்கு வலுசேர்க்கிறது.
சோழர் காலத்தில் ஏற்பட்ட இந்தப் பிரிவினை, விஜய நகர காலத்தில் இன்னும் தீவிரமாகியுள்ளது. 150-200 ஆண்டுகால வரலாறு கொண்ட இந்த வார்த்தை, 19வது நூற்றாண்டில் குறிப்பிட்டதொரு புழக்கத்திற்கு வருகிறது.
`குடியிருக்கும் இடம்` என்னும் பொருளை உடைய `சேரி` என்ற சொல்லை மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட பிரிவினருக்காகப் பயன்படுத்தி அதை இழிசொல்லாக மாற்றிய போக்கு நிகழ்ந்திருக்கிறது என்கிறார், முனைவர் வெ. பிரகாஷ்.
தொழில், பண்பாடு, பொருளாதாரம் சார்ந்தும் அந்தப் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. `பாக்கம்` என்பது கடற்கரை பகுதிகளைக் குறிப்பது போன்று, `சேரி` என்பது பெரும்பாலும் கடற்கரையை ஒட்டிதான் இருக்கும்.
`பாக்கம்`, `பேட்டை` என்ற பெயர்கள் பொதுமக்கள் அதிகம் அறியாத, புழக்கத்தில் இல்லாத வார்த்தையாக இல்லாதபோதும் சமகாலத்திலும் `சேரி` என்ற வார்த்தை இழிசொல்லாகப் பயன்படுத்தப்படுவது ஏன் என்ற கேள்விக்கு முத்து வெ. பிரகாஷ் பதிலளித்தார்.
“பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெறாத மக்கள் அங்கு இருந்துள்ளனர். இந்த வார்த்தை, பண்பாட்டு ரீதியிலான சொலவடையாக மாறிவிட்டது. ஒடுக்கப்பட்ட சாதியினர் குடியிருக்கும் இடம்தான் சேரி. இதற்கு பொருள் மாற்றம் ஏற்பட்டு சோழர் காலத்தில் அது தீவிரப்படுத்தப்பட்டு மக்களின் சிந்தனைக்குள் வேரூன்றி இப்படி மாறியுள்ளது,” என்றார்.
தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் `சேரி` என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் நேர்மறையாக `ஊர், குடில்` என்ற பொருளிலேயே அவற்றில் வழங்கப்பட்டிருக்கிறது.
கலித்தொகையில் ‘நம்சேரி` என்ற வார்த்தை வருகிறது. தொல்காப்பிய உரையில் ‘சேரி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஊர் எனக் குறிப்பிடுவதற்காக சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருவிருத்தத்தில் `சேரிகை` என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது,” என சங்க இலக்கிய ஆதாரங்களைக் கூறுகிறார் முத்து வெ. பிரகாஷ்.
வேறு மொழியில் `சேரி` என்ற வார்த்தை இல்லை என்பதே இருந்திருந்தால் மலையாளம் மொழியில் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.
இன்னும் சில உதாரணங்களை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியம் பகிர்ந்துகொண்டார்.
“சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் இளங்கோவடிகளும் மதுரையை நோக்கி வரும்போது, மாதரி என்ற பெண்ணின் வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த காதை உள்ளது.
அதற்கு ‘புறஞ்சேரி இறுத்த காதை’ என்று பெயர். `புறத்தே இருக்கக்கூடிய சேரியில் அவர்களைத் தங்கச் செய்தல்’ என்பது இதன் பொருள். பிராமணர்கள் இருக்கக்கூடிய இடம் ‘பார்ப்பன சேரி’ என்றும் சிலப்பதிகாரத்தில் உள்ளது,” எனக் குறிப்பிடுகிறார் ஆ.சிவசுப்பிரமணியம்.
பேராசிரியரும் மானுடவியல் ஆய்வாளருமான பக்தவத்சல பாரதி `தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும்` என்னும் நூலை எழுதியுள்ளார்.
தமிழ் சமூகம் திணை சார்ந்தது. ஒவ்வொரு திணைக்கும் ஒரு குறிப்பிட்ட ஊர்ப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில், `சேரி` என்பது முல்லைத் திணைக்கு உரியதாக பக்தவத்சல பாரதி குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் `சேரி` முல்லை திணையில் காணப்பட்டாலும் பின்னர் கடற்கரையோர நகரங்களிலும் அவை இருந்துள்ளதாகச் சுட்டுகிறார்.
அதேபோன்று, `வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்` என்ற தமது நூலில் நொபுரு கரோஷிமா பல சேரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். கம்மாளச்சேரி, ஈழச்சேரி, தலைவாய்ச் சேரி, வண்னாரச்சேரி, பறைச்சேரி, தீண்டாச்சேரி, அறுவை வாணியச்சேரி உள்ளிட்ட பல சேரிகள் இருந்துள்ளன.
`மக்களின் வாழிடம்` என்பதே `சேரி` என்ற சொல்லுக்குப் பொருளாக இருந்து வந்த நிலையில், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே குறிப்பிட்ட பிரிவினர் வாழும் இடமாக `இழிசொல்லாக` பயன்படுத்தப்பட்டிருப்பதாக அவர் அந்தப் புத்தகத்தில் நிறுவியுள்ளார்.
மேலும், ஊர் மேற்கிலும் சேரி கிழக்கிலும் அமைந்திருப்பதற்கு, பொதுவாக ஊரின் நில அமைப்பில் மேற்கு உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் இருக்கும், அதன் பொருட்டே ஊர் மேற்காகவும் சேரி கிழக்காகவும் அமைந்திருப்பதாக விளக்கியுள்ளார்.
சமகாலத்தில் `சேரி` என்ற சொல் பெரும்பாலும் இழிசொல்லாகவே பயன்படுத்தப்படுகிறது. கிராமங்களில் என்றால் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் இடங்களையும் நகரங்களில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள் வாழும் பகுதியைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
சமூக – அரசியல்ரீதியாக `சேரி` என்ற சொல்லின் பயன்பாடு குறித்துப் பேசிய `தலித் முரசு` இதழின் ஆசிரியர் புனித பாண்டியன் கூறுகையில், “காலனி, சேரி இரண்டுமே குடியிருப்புதான். ‘ஏற்கெனவே இழிவானவர்கள் என சித்தரிக்கப்பட்டவர்கள் குறித்துப் பேசும்போது அதைக் கவனமாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
`சேர்ந்து வாழும் இடம்` என்பதை வசவுச் சொல்லாக ஆக்கிவிட்டனர். எப்போதிருந்து தலித்துகள் இழிவானவர்களாகக் கருதப்பட்டார்களோ, மோசமாக நடத்தப்பட்டார்களோ அப்போதிருந்து அவர்களின் மொழி, உடை, பண்பாடு எல்லாமே இழிவானதாகத்தான் கருதப்படுகிறது. வார்த்தைகளை மாற்றத் தேவையில்லை. அதன் பொருளைத்தான் மாற்றிவிட்டனர்,” என்றார்