மக்கள் முன்னிலையில் 16 வயது சிறுமி தில்லியில் கொடூரக் கொலை
மக்கள் முன்னிலையில் 16 வயது சிறுமி தில்லியில் கொடூரக் கொலை!
தில்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், 16 வயது சிறுமி குத்தியும், தலையில் கல்லைப் போட்டு நசுக்கியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவத்தில் கொலையாளி சாஹில் (20) என்பவரை காவல்துறையினர் புலந்த்ஷஹர் பகுதியில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் தனிக்குழுவை நியமித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, மக்கள் சென்று வந்துகொண்டிருந்த பாதையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால், குற்றவாளி எந்த அச்சமும் இன்றி இந்த படுபாதக செயலை செய்திருக்கிறார்.
அவரை யாரும் தடுக்கவோ தடுக்க முயற்சிக்கவோ இல்லை என்பது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருக்கிறது.
ஒரு சாதாரண நிகழ்வை பார்த்துக்கொண்டே கடந்துச் செல்வதைப் போலவே அப்பகுதியை கடந்து சென்ற பத்துக்கும் மேற்பட்டோரின் செயல்பாடு இருந்துள்ளது.
சம்பவத்தின்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சாக்ஷி என்ற சிறுமியை தடுத்து நிறுத்திய சாஹில், அவரை கடுமையாக தாக்கி 20 முறை வயிற்றில் கத்தியால் குத்துகிறார்.
சரிந்து விழுந்த பெண்ணின் தலையில் மிகப்பெரிய சிமெண்ட் கல்லைத் தூக்கிப் போட்டு தலையை நசுக்குகிறார். ஒரு முறை இருமுறை அல்ல பல முறை அவ்வாறு செய்கிறார்.
ஆத்திரத்தில் கல்லைப் போட்டு தலையை நசுக்கிய கொலைகாரர், பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதும், சற்று நேரத்தில் மீண்டும் வந்து, அதே சிமெண்ட் கல்லை எடுத்து மீண்டும் தலையில் போட்டு நசுக்குவதும் பதிவாகியிருக்கிறது.
இதை அனைத்தையும் அங்கிருந்தவர்கள் பார்த்தபடியே கடந்து செல்கிறார்கள்.
தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
புது தில்லியில் ஏற்கனவே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற பேச்சு நிலவும் நிலையில், இந்த சம்பவம் அதனை மெய்ப்பிப்பதாகவே அமைந்துள்ளது.
சம்பவம் நடந்து அரை மணி நேரத்துக்குப் பிறகே இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், துரிதமாக செயல்பட்டு, திங்களன்று குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சாக்ஷி, சாஹில் இருவரும் பழகி வந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.