இருதய நோயால் 28.1% பேர் உயிரிழப்பு ஆண்களில் 15.6% பேருக்கு சர்க்கரை நோய் மத்திய சுகாதார அமைச்சர் தகவல்.!!

இருதய நோயால் 28.1% பேர் உயிரிழப்பு ஆண்களில் 15.6% பேருக்கு சர்க்கரை நோய் மத்திய சுகாதார அமைச்சர் தகவல்.!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வின்படி, நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1 சதவீதம் இருதய நோய்களால் ஏற்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு, புற்றுநோய், நீரிழிவு மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தரவுகள் காட்டுகிறதே? அது உண்மையெனில் மத்திய சுகாதாரத் துறை மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் கேஆர்என் ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிலளித்தது வருமாறு:

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) பல்வேறு ஆய்வுகளை நடத்தி “இந்தியா: தேசத்தின் ஆரோக்கியம்’ என்கிற ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த ஆய்வறிக்கையின்படி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை( 2016) இந்தியாவில் மொத்த இறப்புகளில் 28.1 சதவீதம் இதய நோய்கள் பங்களிப்பளிப்பதாக தெரிவிக்கிறது.

நாட்டில் 1990-ஆம் ஆண்டு 15.2 சதவீதமாக இருந்த இருதய நோயின் உயிர்ப்பலி கடந்த 25 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே மாதிரி ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) மற்றும் தேசிய புற்று நோய் பதிவு திட்டத்தின்படி 2020 முதல் 2022 வரை நாட்டில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை இரு பாலர்களுக்கிடையே முறையே 13.92 லட்சம், 14.26 லட்சம், 14.61 லட்சம் என பதிவாகி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

Read Also  இந்தியாவிலேயே முதல் முறையாக ரோடோ – புரோ அதெரெக்டோமி சிகிச்சை முறையை பயன்படுத்தி இருதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்கி குமரன் மருத்துவமனை – ரேலா இன்ஸ்டிடியூட் மருத்துவர் குழு சாதனை!

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையில் 2019-21 ஆண்டுகளில், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே ரத்த சர்க்கரை அளவு – அதிகரித்தோ அல்லது 140 மில்லி கிராமிற்கு அதிகமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி அதை கட்டுப்படுத்த மருந்து எடுத்துக் கொள்வது பெண்களில் 13.5 சதவீதம் பேரும், ஆண்களில் 15.6 சதவீதம் பேரும் உள்ளனர்.

மத்திய அரசின் சமீபத்திய எச்.ஐ.வி. மதிப்பீடுகளில் 2021 அறிக்கையின்படி, வயது வந்தவர்களிடையே எச்.ஐ.வி. பாதிப்பு 0.21 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 2010-ஆம் ஆண்டை விட (0.31%) சற்று குறைந்துள்ளது.

இந்த தீவிர நோய்களுக்கு தேசிய சுகாதாரத் துறையின் கீழ் அரசு பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

மேலும், உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மனித வள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு உருவாக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்கள், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை பரிசோதித்து ஆரம்பகால நோயறிதல், மேலாண்மை போன்ற பொருத்தமான சுகாதார வசதிகள் பரிந்துரைக்கப்படுகிறது.

ஃபிட் இந்தியா இயக்கம், யோகா தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் ஆயுஷ் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *