நடிகர் துல்கர் சல்மானின் திரைப்படங்களுக்கு கேரளா திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.
சென்னை 19 மார்ச் 2022 நடிகர் துல்கர் சல்மானின் திரைப்படங்களுக்கு கேரளா திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.
மலையாளத் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மானுக்கு வரும் காலத்தில் தொழில் ஒத்துழைப்பு தரப்போவதில்லை என்று கேரளா திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘சல்யூட்’ திரைப்படத்தை திரையரங்குகளுக்குத் தருவதாகச் சொல்லி ஒப்பந்தமும் செய்துவிட்டு கடைசியாக அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு ஓடிடி தளத்தில் அந்த ‘சல்யூட்’
திரைப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் திரையிட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த
கேரளா திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த ‘சல்யூட்’ திரைப்படம் ஏற்கெனவே ஜனவரி 14-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அப்போது கேரளாவில் ‘ஓமைக்ரான் வைரஸ்’ பரவல் அதிகமாக இருந்ததால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனால் இந்தத் திரைப்படத்தின் திரையரங்குகளில் திரையிடலும் தடைப்பட்டது.
இதையடுத்து மீண்டும் பிப்ரவரி 14-ம் தேதியன்று திரைப்படத்தைத் திரையரங்குகளில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அப்போது நடிகர் துல்கர் சல்மானின் அலுவலக ஊழியர்கள் பலரும் ஓமைக்ரான் வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டதால் அப்போதும் திரைப்படம் வெளியாகவில்லையாம்
மார்ச் 31-ம் தேதிக்குள்ளாக ஓடிடியில் வெளியாக வேண்டும் என்று ‘சோனி லிவ்’ ஓடிடி தளத்துடன் முன்பேயே ஒப்பந்தம் செய்திருந்ததால் வேறு வழியில்லாமல் இப்போது ஓடிடியில் திரைப்படத்தை வெளியிட்டதாக நடிகர் துல்கர் சல்மானின் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நடிகர் துல்கர் சல்மானின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films ஏற்கெனவே தயாரித்திருந்த ‘குரூப்’, மற்றும் ‘உபாசரபூர்வம் குண்டா ஜெயன்’ ஆகிய படங்களும் ஓடிடியில்தான் வெளியாகியிருந்தன.
இது குறித்து கேரள மாநில திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவரான விஜயகுமார் பேசுகையில்,
“ஓடிடியினால்தான் தாங்கள் வாழ்வதாக நட்சத்திர நடிகர்கள் நினைத்தால் அவர்கள் அந்த வழியிலேயே போகட்டும். நாங்கள் தடை போடவில்லை.
எங்களுக்கு அனைத்து நடிகர்களும் ஒன்றுதான்.
மோகன்லால், பிருத்விராஜ் உள்ளிட்ட சிலரின் படங்களும் ஓடிடியில் வெளியாகியுள்ளன.
அப்போது திரையரங்குகள் மூடப்பட்டு, பாதி டிக்கெட்டுகளுக்கு மட்டுமே அனுமதியிருந்ததால் அவர்கள் ஓடிடிக்குக் கொடுத்தார்கள்.
இப்போதும் இதையே தொடர்ந்தால் நிச்சயமாக மோகன்லாலின் படங்களையும் எதிர்காலத்தில் நாங்கள் எங்களது திரையரங்குகளில் திரையிட மாட்டோம்.
இது அவர்களுக்கான தடை இல்லை.
எங்களது வாழ்வாதாரத்திற்காக
திரையரங்கு உரிமையாளர் அருளாகிய நாங்கள் போராடி வரும் சூழலில், எங்களைக் காப்பாற்றிக் கொள்ள நாங்கள் எடுக்கும் தற்சார்பு நடவடிக்கைதான் இது..” என்று மிக. ஆவேசமாக பேசியுள்ளார்.