பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை 28 ஏப்ரல் 2022 பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இதற்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழக அரசும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று விளக்கம் அளித்தார்.

அவர் பேச்சு விவரம் வருமாறு:-

பேரவைத் தலைவர் அவர்களே இங்கே காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை சில கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார்.

நேற்றைய தினம், கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாநில முதல்வர்களோடு, மாநிலத்தில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகளோடு, நம்முடைய பாரதப் பிரதமர் காணொலிக் காட்சி மூலமாக ஒரு கூட்டத்தை நடத்தினார்.

அந்தக் கூட்டத்திலே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி, அதை சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழி வகையைக் காணவில்லை என்று ஒரு கருத்தை அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு எடுத்த முயற்சிகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும், இந்தப் பொருட்களின் மேல் மாநில அரசுகள் விதிக்கக்கூடிய வரிகளை இந்த அரசுகள் குறைக்காத காரணத்தால்தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாட்டில் குறைக்க முடியவில்லை என்றும் பிரதமர் நேற்றைக்குக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

Read Also  தமிழகத்தில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

இதனைப்பற்றி நான் ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்று சொன்னால், முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போல், அவர் இந்தக் கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோது, அதற்கேற்றாற் போல பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு.

பெட்ரோல் மற்றும் டீசல் மேல் விதிக்கப்படக்கூடிய மத்திய கலால் வரியானது, மாநில அரசுகளோடு பகிர்ந்து அளிக்கக்கூடியது என்ற காரணத்தால், அதனைக் குறைத்து மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் வருவாயில் கை வைத்தது மத்திய அரசு.

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படக்கூடிய மத்திய தலவரி மற்றும் தலமேல்வரியும், மாநில அரசுகளோடு பகிர்ந்தளிக்கப்படத் தேவையில்லை என்பதால், இந்த வரிகளை மிகக் கடுமையாக உயர்த்தி, மக்கள் மீது சுமையைத் திணித்து, அதனால் கிடைக்கும் லட்சக்கணக்கான கோடி வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு.

சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக பாசாங்கு காட்டுவதுபோல இந்தத் தேர்தலுக்கு முன்பாக அதிரடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு.

மாநில அரசு தேர்தல்கள் முடிந்த பின்பு, அடுத்த வாரம் முதல் மடமடவென விலையை முன்பு இருந்ததை விட உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தும் மத்திய அரசு.

Read Also  பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு தெரிவித்துள்ளது.!

ஆனால், தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின்பு, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு மக்கள் நலன் கருதி, நிதிநிலைமையையும் பொருட்படுத்தாமல், மத்திய அரசு குறைப்பதற்கு முன்பாகவே, பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியைக் குறைத்தது தமிழக அரசு.

இவையனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே முனைப்பு காட்டுகிறார்கள்; யார் பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களுடைய முடிவிற்கே நான் விட்டு விடுகிறேன்.

எனவே, இதுகுறித்து விவரமாக டேட்டா அடிப்படையிலே நம்முடைய நிதித்துறை அமைச்சரும் விளக்கம் அளிக்க இருக்கிறார் என்பதைத் தெரிவித்து அமைகிறேன்.

இவ்வாறு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *