அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்தைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு.
சென்னை 14 மே 2022 அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்தைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு.
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்போது தமிழகமெங்கும் நம்பர் பிளேட்டில் ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்துகள் எழுதப்பட்டோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்துக்குப் புறம்பாக பயன் படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (கே)-ன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமேதான்.
அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்புச் சான்று விலக்கு உள்ளது.
உரிய வரி விலக்கு மற்றும் காப்புச் சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவே, தமிழ்நாடு அரசு வாகனங்களைத் தவிர மற்ற அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் வாகனங்களில் ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்துகளைப் பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.