தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்.!
சென்னை 14 மே 2022 தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்.!
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் நடிகர் பிரகாஷ் ராஜ், ராஜ்ய சபா எம்பியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகர் பிரகாஷ்ராஜ், கன்னட திரைப்பட உலகில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார்.
நடிப்புத் திறமையில் தனித்துவமான நடிப்பின் மூலம், மொழிகளைக் கடந்து ரசிகர்களை கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.
இவரின் தோழியும், பிரபல பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ், கடந்த 2017-ம் வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கு காரணம் பாஜகவின் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ். தான் எனக் கூறப்பட்ட நிலையில், இதையடுத்து பாஜகவுக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ், தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில், மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நின்று பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.
பாஜகவை விமர்சித்த வந்த, அதே வேளையில், கடந்தாண்டு நடைபெற்ற தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் களம் இறங்கினார்.
இந்தத் தேர்தலிலும் பிரகாஷ் ராஜ் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.
இதில் தெலங்கானாவில் மொத்தமுள்ள 7 ராஜ்யசபா எம்பி பதவிகளும் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிடம் உள்ளன. எம்பிக்கள் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி ஸ்ரீநிவாஸ் ஆகியோர், ஜூன் 21-ம் தேதி ஓய்வு பெறுவதால், மாநிலத்தில் இரண்டு எம்பி பதவிகள் காலியாக உள்ளன.
தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின் படி தெலுங்கானாவில் இரு இடங்களுக்கான எம்பி தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இரண்டு இடங்கள் மட்டும் இல்லாமல், மேலும் பந்தா பிரகாஷின் ராஜ்யசபா இடத்துக்கு மே 30-ம் தேதியே இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 3 ராஜ்யசபா எம்.பி பதவிகள் காலியாக உள்ளன.
சட்டப் பேரவையின் பெரும்பான்மை பலம் காரணமாக, காலியாகவுள்ள இந்த 3 எம்.பி பதவிகளையும், ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியே கைப்பற்ற வாய்ப்புள்ளது.
இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை நடிகர் பிரகாஷ் ராஜ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவை, அவரின் எர்ரவல்லி பண்ணை வீட்டில், நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்துப் பேசினார்.
இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதமும் முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
கடந்த பிப்ரவரியில் மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோருடன் சந்திர சேகர் ராவ் நடத்திய சந்திப்பின் போதும் நடிகர் பிரகாஷ் ராஜ் உடன் இருந்தார்.
ராஜ்ய சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நடந்த இந்த சந்திப்பு மற்றும் பாஜகவை, நடிகர் பிரகாஷ்ராஜ் தெலங்கானா மாநில முதல்வரும் ஒரே மாதிரியாக எதிர்ப்பதால், நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் மனுதாக்கல் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் பெயரும் தெலங்கானாவில் அடிபடுகிறது.
இவர் பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், ஆளும் கட்சி போட்டியின்றி 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் பலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.