முன் ஜாமீன் மனு தள்ளுபடி மேல்முறையீடும் இல்லை திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நிலை என்ன? கைதாவாரா?
சென்னை 14 ஆகஸ்ட் 2022 முன் ஜாமீன் மனு தள்ளுபடி மேல்முறையீடும் இல்லை திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நிலை என்ன? கைதாவாரா?
சென்னை: கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ள நிலையில் அவர் முன் ஜாமீனுக்கு உயர் நீதிமன்றத்தை நாடாத நிலையில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசிய திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணனை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதை அடுத்து, அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இந்து முன்னணி aமைப்பின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளராக இருக்கிறார்.
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியிருந்தார்.
இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
அதில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் கனல் கண்ணன் கைது செய்யப்படுவார் என்கிற தகவலும் பரவி வருகிறது.
இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்படாமலிருக்க முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கனல் கண்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், “மனுதாரர் பேசியது, நாட்டின் எந்த சட்டத்துக்கு எதிரானது அல்ல என்றும், அந்த சிலையை அகற்றக்கோரி, ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
சிலையை நிறுவிய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், மனுதாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்.
சிலையை உடைக்கப் போவதாக கூறவில்லை என்றும், மாறாக, சிலையை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கைதான் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது ஒன்றும் தீங்கானது அல்ல என்றும், எந்த குற்றமும் செய்யவில்லை”. என்றும் கூறி, எனவே முன் ஜாமின் வழங்க வேண்டும். என வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, “கனல் கண்ணன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது, மதங்களை குருப்பிட்டு பேசியுள்ளார்,
கனல் கண்ணன் பேச்சு இரு தரப்பினர் இடையே மத மோதல், பகைமை, மற்றும் வெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது.
அவர் பேசிய வீடியோவை, சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரின் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது, தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.
பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளதால், கனல் கண்ணனை கைது செய்து, விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்பதால், முன் ஜாமின் வழங்கக்கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஜாமின் கோரிய கனல் கண்ணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பொதுவாக முன் ஜாமீன் மனு செசன்ஸ் கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தை மனுதாரர் நாடுவார்,
அந்த மனு விசாரணைக்கு ஏற்க்கப்படும் பட்சத்தில் விசாரணை முடியும்வரை சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட வாய்ப்பில்லை. கனல் கண்ணன் விவகாரத்தில் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததாக தகவல் இல்லை.
அவ்வாறு அவர் நேற்று மனு அளித்திருந்தாலும் அது பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வராததால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பே அதிகம் உள்ளது.
மேல் முறையீடு செய்யாவிட்டால் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை வரும் ஆகஸ்டு 16 அன்றுதான் செய்ய முடியும். 13, 14,15 விடுமுறை தினம் என்பதால் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை.
ஆகவே இடைப்பட்ட நாட்களில் கனல் கண்ணனை போலீஸ் கைது செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.