திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்.!

திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக வலியுறுத்தல்.!

சென்னை 20 ஏப்ரல் 2023 கிறித்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பும் உரிமைகளும் மதம் மாறிய பிறகும் கிடைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் ஒன்றை முதல்வர் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.

உள்நோக்கம் கொண்ட வாக்கு வங்கி அரசியல் என்பதோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. திராவிட முன்னேற்ற கழகம் மதவாத தீய சக்தியென்பதை இந்த தீர்மானமானது உறுதி செய்கிறது.

ஹிந்து மதத்தில் இருந்த தீண்டாமையினாலேயே சமூக ரீதியாக பட்டியிலன மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) ஆணை 1950-ன்படி, ஹிந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தை சார்ந்த எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது .

அதன் பின் 1956 ம் ஆண்டு, ஹிந்து கலாச்சாரத்தை ஒட்டியே பின்பற்றியே சீக்கிய மற்றும் புத்த மதத்திலும் தீண்டாமை இருப்பதாக குறிப்பிட்ட காக்கா காலேக்கர் ஆணைய பரிந்துரையை ஏற்று சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும், 1990 ஆம் ஆண்டு சிறுபான்மை சமுதாய உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் படி பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும் பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

ஆனால், ஹிந்து மதத்தில் மட்டுமே தீண்டாமை உள்ளதாகவும், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை இல்லை என்றும் தொடர்ந்து தி மு க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் கூறி வருகிற நிலையில், அந்த மதத்தை சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்? அப்படியானால் கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்பதை முதல்வர் ஸ்டாலின் மற்றும் தொல்.திருமாவளவன்போன்றோர் ஒப்பு கொள்கின்றனரா? அப்படியானால் எந்த தீண்டாமைக்காக மதம் மாறினார்களோ அதே தீண்டாமை மற்ற மதங்களிலும் உள்ளதால் ஹிந்து மதத்திற்கே திரும்புமாறு அழைப்பு விடுவார்களா திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், திருமாவளவன் அவர்களும்?

Read Also  காஷ்மீர் சர்வதேச எல்லையில் இரவு ஊரடங்கு; 2 மாதத்திற்கு அமல்.!

அப்படி இட ஒதுக்கீடு அளிக்கும் நிலையில், பட்டியிலன மக்கள் தொகை அதிகரித்து ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டில் பல்வேறு குழப்பங்கள் உருவாகாதா? நீண்ட நாட்களாக அவதியுற்று வரும் பட்டியிலன மக்கள் பெரும் போட்டியை சந்திப்பதன் மூலம் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட மாட்டார்களா? நாடு முழுவதும் கடும் பிரச்சினைகள் ஏற்பட்டு பட்டியிலன மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகாதா? பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி மக்களை சின்னாபின்னமாக்கவே இந்த தீர்மானம் வழிவகை செய்கிறது.

இந்திய தலைமை பதிவாளரின் 2001 அறிக்கையின் படி, கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்கள் ஒரே இனத்தை சார்ந்தவர்கள் அல்ல என்றும் பல்வேறு சாதிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்ட நிலையில், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மக்கள் அனைவரையும் பட்டியலினத்தில் சேர்ப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

மேலும், இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மக்களை பட்டியிலினத்தில் சேர்ப்பதன் மூலம் கிருஸ்துவம் மற்றும் இஸ்லாமிய மதங்களில், இந்திய நாடு சாதியை திணிப்பதாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்து இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நமக்கு எதிரான நாடுகள் முயற்சிக்கும்.

மேலும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை 2007 லேயே அளிக்கப்பட்ட நிலையில், தி மு க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, அதன் பின் ஏழு வருடங்கள் ஆட்சியில் இருந்தும், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தாது ஏன்?

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மதங்களில் தீண்டாமை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அந்த மதத்தினரும் ஏற்று கொள்வார்களா? இது வரை ஹிந்து மதத்தில் மட்டுமே தீண்டாமை இருந்ததாக கூறி இழிவுபடுத்தி வந்தவர்கள் வருத்தம் தெரிவிப்பார்களா?

Read Also  ஒத்தைக்கு ஒத்தை வா” என காவலரை வம்புக்கு இழுத்த பாஜக நிர்வாகி கைது.!

*• THE SEITHIKATHIR | WHATSAPP |*
*• JOIN US:* https://chat.whatsapp.com/CMHPIFKkt3dIUAwI03O5o9

மத்திய அரசு ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளதோடு, நீதியரசர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் குழுவை அமைத்து இந்த விவகாரம் குறித்து அறிக்கையை கேட்டிருக்கிறது. கிருஸ்துவ, இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வழக்கு கடந்த இருபது வருடங்களாக உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிற நிலையில், தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தனி தீர்மானம் மதங்களுக்கிடையே பிளவை உருவாக்கவே வழிவகை செய்யும்.

சாதிகளே இல்லை என்று சொல்கிற மதங்களில், ஓட்டுக்காக சாதிய இட ஒதுக்கீடு கேட்டு மக்களை தூண்டிவிடும் தி மு க அரசின் மதவாத போக்கை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

இஸ்லாமிய மற்றும் கிருஸ்த்துவ மதங்களில் சாதிய பிளவுகள் உள்ளது என்றும், தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகிறாரா? அப்படி உறுதி செய்வாரேயானால் இது வரை ஹிந்து மதத்தை மட்டும் குறி வைத்து தாக்கியதற்கு தி மு க மற்றும் கூட்டணி கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் இந்த தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *