வரும் லோக்சபா தேர்தலில், கூட்டணி சேர்ந்து போட்டியிட, கமல் முடிவு செய்துள்ளார்.!!
சென்னை 16 நவம்பர் 2022 வரும் லோக்சபா தேர்தலில், கூட்டணி சேர்ந்து போட்டியிட, கமல் முடிவு செய்துள்ளார்.!!
மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலர்கள் கூட்டம், அக்கட்சி தலைவர் கமல் தலைமையில், சென்னையில் இன்று நடந்தது.ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில், கூட்டணி, பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பணிகள் என, பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், அக்கட்சி தனித்து போட்டியிட்டது. கடந்த சட்டசபை தேர்தலில், சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பெரிய கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, கமல் அளித்த பேட்டியில், “கூட்டணி, தேர்தல் பணி என பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். இப்போதைக்கு எதையும் வெளிப்படையாக கூற முடியாது,” என்றார்.
‘கூட்டணி அல்லது தனித்து போட்டியிட்டாலும், நம் கட்சி பலம் வாய்ந்த ஒன்றாக களம் இறங்க வேண்டும். பூத் கமிட்டி உள்ளிட்ட தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என, கமல் கூறியதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே திரையுலகில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியுடன் கூட்டணி வைத்துள்ள கமல், அதில் வெற்றியும் பெற்றார்.
லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, இரண்டு அல்லது மூன்று தொகுதிகளில் போட்டியிடலாம் என, கமல் எண்ணுவதாக, அக்கட்சியினர் கூறினர்.