நிலவில் கால் பதித்தவர் விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின் 93 வயதில் திருமணம்.!!!
சென்னை 22 ஜனவரி 2023 நிலவில் கால் பதித்தவர் விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின் 93 வயதில் திருமணம்.!!!
வாஷிங்டன்,-நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், தன், 93வது வயதில், நீண்ட காலமாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்தார்.
கடந்த 1969ல், அப்பல்லோ – 11 விண்கலம் வாயிலாக நிலவுக்கு பயணித்து, இதில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவர், பஸ் ஆல்ட்ரின்.
இவருடன் பயணித்த மற்ற வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’வில் பணியாற்றிய ஆல்ட்ரின், 1971ல் ஓய்வு பெற்றார். விண்வெளி ஆய்வு தொடர்பாக தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இவர், ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் தன், 93வது பிறந்த நாளை இவர் கொண்டாடினார்.
அப்போது, அன்கா பார், 63, என்ற பெண்ணுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அந்த பெண்ணை திருமணம் செய்ததாக பதிவிட்டுஇருந்தார்.
இதில் அவர் கூறியுள்ளதாவது:
என் நீண்ட நாள் காதலியை, என்னுடைய 93வது வயதில் திருமணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.
புதிதாக திருமணம் செய்த இளம் வயதினர் எப்படி மகிழ்ச்சியாக இருப்பரோ, அதேபோல் நாங்களும் மகிழ்ச்சியாக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆல்ட்ரின் திருமணம் செய்துள்ள அன்கா பார், அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றுகிறார். இவருக்கு இது எத்தனையாவது திருமணம் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.