தமிழ்க்காரியின் கவிதைகள் இலையுதிர் காலத்திலும் நறுமணம் வீசும் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்!

சென்னை 25 ஜூன் 2022 தமிழ்க்காரியின் கவிதைகள் இலையுதிர் காலத்திலும் நறுமணம் வீசும் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்!

அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான தமிழ்க்காரி என்கிற சித்ரா மகேஷ் அவர்களின் 2 நூல்கள் வெளியீட்டு விழா 23.06.2022 அன்று லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது.

தமிழ் இலக்கியத்தை பறை சாற்றும் வகையில் ஓவியர் மருதுவின் தூரிகையில் தமிழ்க்காரியின் எழுத்தில் உருவான காதல் கதை சொல்லட்டுமா? மற்றும் பூக்கள் பூக்கும் தருணம் ஆகிய 2 நூல்களும் அந்தரி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டன.

இவ்விழாவில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வரவேற்புரை வழங்க, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மதுரை நகைச்சுவை மன்ற தலைவரும் பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக தமிழ் வளர் மைய இயக்குனர் முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன் ஆகியோர் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது..

தி.மு.க சுற்றுச் சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அனைவரையும் வரவேற்று பேசும் போது…

எழுதுவது சிறிய விஷயம் கிடையாது.

எங்கள் ஊரில் எழுத்தாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வந்த சித்ரா அவர்களை பொக்கிஷமாக கருதுகிறோம்.

சங்க இலக்கியத்திலிருந்து தான் சகோதரி அவர்கள் காதலைப் பற்றி எழுதியிருக்கிறார்.

எனக்கு அவ்வப்போது தோன்றும் விஷயம், பள்ளியில் திருக்குறளை மனப்பாடம் செய்யுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக காதலை வெளிப்படுத்த திருக்குறளைப் பயன்படுத்துங்கள் என்று கூறியிருந்தால், அனைவரும் திருக்குறளைப் படித்திருப்பார்கள்.

சுலபமாகவும் மனப்பாடம் ஆகியிருக்கும்.

அதிகளவில் புத்தகங்கள் வெளியானது தமிழ் மொழியில் தான்.

இருப்பினும், இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியாக வேண்டும் என்றார்.

ஓவியர் டிராட்ஸ்கி மருது பேசும் போது…

தமிழ்க்காரி அவர்களை 5 வருடங்களுக்கு முன்பு டெக்ஸாஸில் ஒரு விழாவில் தான் சந்தித்தேன்.

அந்த விழாவை சுறுசுறுப்பாகவும் சிறப்பாகவும் நடத்தினார். அதன் பிறகு, அவரிடம் எழுதுவதற்கு ஆர்வம் இருப்பதை அறிந்து கொண்டேன்.

ஒரு கலைஞராக சித்ராவின் எழுத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

அவர்கள் எழுத்து மூலம் காட்டிய இந்தியாவைத் தான் ஐரோப்பா காட்சியாகப் பார்த்தது.

ஓவிய கல்லூரியில் மூத்த ஆசிரியர்களின் மூலம் தமிழ் மீது பார்வையும் ஆர்வமும் உண்டாகியது. சித்ராவின் இந்த நூலுக்குப் பிறகு தமிழைப் பற்றிக் காட்சியாக பல படைப்புகள் வரும் என்றார்.

முனைவர் தமிழச்சி தங்க பாண்டியன் பேசும்போது…

வைரத்தை நீங்கள் மிகச்சரியாக எப்படி கணிக்க முடியுமென்றால் அதைப் பட்டுத்துணியில் வைத்துத் தான்.

அதை போல என் தங்கை தமிழ்க்காரி கவிதைகள் மூலம் தமிழ் நிலம், தமிழ் மண்ணிற்கு உரிய கலைகளை உலகமெங்கும் கொண்டு சென்றிருக்கிறார்.

மகா கலைஞன் என்று சொல்லக் கூடியவர் ஓவியர் டிராட்ஸ்கி மருது.

பொதுவாக புத்தக விழாவிற்கு செல்வது மனதிற்கு மகிழ்ச்சி தருபவை.

கடந்த 3 ஆண்டுகளில் புத்தக விழாவிற்கு செல்வதில் பல அலுவல்கள் காரணமாக ஒருமுறைக்கு நூறு முறை யோசித்து தான் வருவதாகச் சொல்வேன்.

ஏனென்றால், வருகிறேன் என்று கூறி விட்டு அலுவல் காரணமாக கடைசி நிமிடங்களில் செல்ல இயலாவிட்டால் அது தவறாகி விடும் என்பதற்காக.

ஆனால், மிகக் குறைந்த அளவே புத்தக விழாவிற்கு சென்று வந்த அவலமான சூழலை மாற்றி, மிகுந்த மகிழ்ச்சிக்குரிய மாலையாக இந்த மாலையை என் தங்கை பரிசாக தந்திருக்கிறார்.

மொழி உரை நடையில் இருக்கும் போது தான் வீரியமான சுவாசமாக புலப்படும் என்று கவிஞர் அபி சொன்னதாக கேட்ட ஞாபகம். ஆனால், என்னைப் பொருத்தவரை கவிதையில் தான் மொழி தன்னுடைய சுவாசத்தை வெளிப் படுத்துகிறது என்று நான் நம்புகிறேன்.

Read Also  அந்தமானில் டார்லிங் என்றால் சிறை தண்டனை நீதிமன்றம் எச்சரிக்கை !!

காதல் கதை சொல்லட்டுமா? மற்றும் பூக்கள் பூக்கும் தருணம்…

இந்த இரண்டு புத்தகங்கள் கிரேக்க புராணம், ஓவியத்தினுடைய ஆழம் பற்றி ஒரு இடத்தில் சொல்லுகிறது.

அதாவது தன்னுடைய காதலனுடைய நிழலை சுவரில் பார்த்த காதலி, என்று வரைய துவங்குவதில் இருந்து கிரேக்கர்களின் வரலாற்றை கூறுகிறது.

அதற்கு ஓவியர் மருதுவை சரியாக தேர்வு செய்திருக்கிறார்.

ஓவியமாக புத்தகத்தைப் பார்த்து ஓவியத்தைத் தொட்டு உணரும் பொழுது மகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது.

அதற்கு மருது அண்ணனுக்குப் பாராட்டுகள்.

என்னுடைய புத்தகத்தின் அட்டையில் மருது அண்ணனின் ஓவியம் இல்லாமல் ஒன்று கூட வெளியானதில்லை.

கவிதைகளுக்காக காத்திருப்பதை விட அண்ணன் தான் முகப்போவியம் வரைய வேண்டும் என்று காத்திருந்து உரிமையோடு வாங்கி செல்பவள் நான்.

ஏனென்றால், கவிதை, கட்டுரை, புதினம் எதுவாக இருக்கட்டும் இன்னொரு கலை வடிவத்தின் கையைப் பிடித்துக் கொண்டு நடை போடும் போது அதனுடைய தாக்கமும், அதனுடைய வீரியமும், அதனுடைய வெளிப்பாடும், வேறொரு இடத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்லுகின்றன.

வாழ்க்கையின் அருகில் இருப்பவன் தான் மிகச் சிறந்த வாசகனாக இருக்க முடியும்.

மிகச் சிறந்த கவிஞனாகவும் இருக்க முடியும்.

அந்த வகையில் சிறந்த வாசகனாகவும், வாழ்வைக் கொண்டாடுபவளாகவும், ரசனைக்காரியாகவும் தான் தமிழ்க்காரி எனக்கு அறிமுகம்.

இன்னும் சொல்லப்போனால் இன்று தான் பார்த்திருக்கிறோம் என்றாலும் கூட எத்தனையோ முறை பார்த்ததைப் போல, எத்தனையோ முறை பேசியதைப் போல பல இரவுகளில் உரையாடி இருக்கின்றோம்.

தீராத தாகம் போல தமிழை உண்டு, பருகி, கேட்டு அதனைப் பல வகையிலும் வாசித்து, உள்வாங்கிக் கொண்டு அதை கவிதைகளிலே கொண்டு வருகின்ற வித்தையை தங்கை தன் வசப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்க்காரி அருமையான பெயர். பெயரில் என்ன இருக்கிறது? பெயரில் தான் எல்லாமே இருக்கிறது.

தமிழ்க்காரி ஆகட்டும், தமிழச்சி ஆகட்டும், ஏன் இந்த புனைப் பெயரை எடுக்கின்றோம்? இதில் ஓர் அரசியல் இருக்கின்றது.

தமிழ் மண்ணோடு, நிலத்தோடு தொடர்புடைய இன்னும் சொல்லப்போனால் கிராமத்தில் புழுதிப் படர்ந்த கிளைச் சாலையில் வியர்வையும், கவிச்சியும் அடிக்கின்ற மண்ணிலிருந்து வருகின்ற பெண் நான் என்பதால், நான் தமிழச்சி ஆவேன்.

அதைப் போலத் தான் தமிழைப் அனைத்து புலன்களாலும் துய்த்து அதனைத் தனது வெளிப்பாட்டினால் மட்டு மல்லாமல், இந்த இரண்டு புத்தகங்களிலும் குறிப்பாக, தமிழ்த் திணைகளை சங்கத் தமிழின் நீட்சியாக ஐயா அவர்கள் சொன்னது போல தமிழ்த் திணை பண்பாடுகளும், அயல் பண்பாடுகளும் இணைந்து பின்னிப் பிணைந்து வாழ்கின்ற சூழல் தான்.

பல்வேறு தேசங்களில் நீங்கள் பரவிக்கிடந்து பிழைப்பிற்காக புலம்பெயர்ந்து வாழ்கின்ற சூழலில், தமிழ் பண்பாடுடன், வேர்களை செழுமையான மரபிலிருந்து, அந்த வேர்களைத் தக்க வைத்துக் கொண்டு அதே சமயம் அயல் பண்பாட்டினுடைய இறக்கைகளையும் எப்படி சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்ற சூழலில் தன்னுடைய மொழி, தன்னுடைய நிலம், தன்னுடைய இலக்கியம் தந்திருக்கின்ற செம்மையான வளத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு புத்தகத்திலும், நடைமுறை வாழ்க்கையிலும் செல்லுகின்ற தங்கையின் படைப்புகளைப் பற்றி நான் விரிவாக அணிந்துரை எழுதியிருக்கின்றேன்.

மொழி என்று சொன்னால் கிரேக்கத்தை தத்துவத்தின் மொழி என்று சொல்லுவார்கள்.

லத்தீனை சட்டத்தின் மொழி என்பார்கள்.

இத்தாலியை காதலின் மொழி என்பார்கள்.

தமிழை இரக்கத்தின் மொழி என்கிறார்கள்.

ஆனால், இரண்டு புத்தகத்தில் சங்கத்தின் நீட்சியாகப் படிக்கும் பொழுது, தமிழைத் தான் காதலின் மொழி என்று சொல்ல வேண்டும்.

குறுந்தொகையில் நல்லை என்று வர்ணிக்கப்பட்ட பாடலில் சிலவற்றை எடுத்து உரை எழுதியிருக்கிறார்.

இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான உரைகள் ஆண்களால் எழுதப்பட்டவை.

எனக்குத் தெரிந்து முதல் முறையாக ஒரு பெண் அதுவும் தமிழ்க்காரியாக முற்றிலும் அவருடைய கண்ணோட்டத்தோடு நல்லை அல்லை நீ, மயிலிறகாம் கூந்தல் போன்ற அருமையான தலைப்புகளை சூட்டியிருக்கிறார்.

Read Also  தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

குறிஞ்சிப் பாட்டு நாடகத்தில் நான் நடித்துள்ளேன்.

அந்த நினைவோடு இந்த புத்தகங்களுக்குள் சென்றேன்.

பொதுவாக 99 பூக்களைத் தான் நாம் நினைவில் கொள்வோம்.

அதையும் எனது உரையில் சுட்டிக் காட்டியிருப்பேன்.

நான் பாலை நிலத்துக்காரி. முழுக்க முழுக்க கரிசல்காடும், வானம் பார்த்த பூமியும், செழுமை என்பதை அறியாத திறந்த வெளியில் கிடை ஆடுகளுடனும், ஆட்டுப் புழுக்கையுடனும் மஞ்சணத்தி மற்றும் வேப்பமரம் கூட அரிதாக இருக்கின்ற கால சூழலில் வளர்ந்த பெண் நான்.

தமிழச்சி என்ற பெயர் சூட்டும் முன்பு விரலி என்கிற பெயர் மீது மிகப்பெரிய நேசமும், வியப்பும் இருந்தது.

ஏனென்றால், பாடி ஆடி, நடிப்பதால் விரலி என்கிற பெருமை கொள்கின்றேன்.

திணை மரபினுடைய நீட்சியாக வாழ்க்கை மரபை இன்று வரை கொண்டுவர விரும்பினாலும், எச்சங்களைத் தான் இன்னமும் வைத்திருக்க முடிகின்றது.

ஏனென்றால், திணை மரபை நவீன உலகம் எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் சிதைத்தாகி விட்டது.

மீட்டெடுகின்ற முயற்சியாக அண்ணனைப் போல ஓவியத்தின் வழியாக வரலாற்றுத் தொடர்ச்சியை மிகச் சரியாக கொடுக்க வேண்டும்.

இப்போது இருக்கும் தலைமுறைக்கு சங்க இலக்கியங்களை சுலபமாக புரிய வைக்கக்கூடிய சரியான வழியைக் சித்ரா காட்டியிருக்கிறார்.

பேச்சு மொழிக்கும், கவிதை மொழிக்கும் பாதை தூரமானது. அதை புத்தக வடிவில் கொடுக்கும் போது எழுதுவோர்களுக்கும், வாசிப்பவர்களுக்கு தனிப்பட்ட உலகத்தை கொடுக்கிறது.

நட்சத்திரங்களை விட அதிகம் பேசுவது, அவற்றின் இடையே இருக்கும் இருள் என்று தமிழ் சொல்லுவது போல, இரண்டு வார்த்தைகள், இரண்டு வாக்கியங்கள், இரண்டு கவிதைகளுக்கு இடையிலான மௌனம் என்று சொல்லப்படுகிற இடைவெளி மிகுந்த முக்கியத்துவமாக கருதப்படுகின்றது.

அதுபோல காதல் உணர்வை தமிழ்க்காரி எப்படி குறிஞ்சித் திணை கபிலரின் வரிகளிலிருந்து எடுத்து தன் வரிகளிலே எழுதுகின்றார் என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.

இரவு முழுதும் காதல் முடித்து எழுந்த பெண்ணைப் போல இன்று காலை கண் விழிக்கின்றது.

காற்று எனும் பைனாகுலரின் வழியாக காட்டுகின்றது ஒரு குழந்தையின் கண்களுடன்.

இன்னமும் பழுக்காத பச்சை ஆப்பிளை போல இன்றைய தினம் இருக்கின்றது.

இதுதான் நவீன மொழி கொடுத்திருக்கின்ற வசீகர வெளிப்பாடு.

திணை மரபை எழுத்து வடிவில் கொடுக்கின்ற தங்கையின் பிரயத்தனம் பாராட்டிற்குரியது.

எனது கவிதைகளை விற்றப் பிறகு தான் தெரிந்தது. இலையுதிர் காலத்திற்கு பிறகும் நறுமணம் இருக்கும் என்று.

அது போல தங்கையின் நறுமணம் ஊட்டுகின்ற எழுத்துகள் நமக்கு கிடைத்திருக்கின்றது.

அதற்கு இன்னும் மணம் சேர்த்தது அண்ணன் மருதுவின் ஓவியங்கள்.

ஒரு கவிதையைப் படித்து முடித்ததும் மனக் கண் முன் ஒரு சித்திரம் எழும். அதை அப்படியே ஓவியமாக கொடுத்திருக்கிறார்.

ஓலைச்சுவடி தமிழை கணினி உலகத்திற்கு ஏற்ப செழுமையைக் கூட்டி தந்திருக்கின்றார்.

காலந்தோறும் அவ்வை வரிசையில் தமிழ்க்காரியையும் வைத்துப் போற்றுவோம்.

அவர் தொடர்ந்து தமிழ் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு அவ்வை இருந்திருக்கிறார்.

இனிமேலும் இருக்க வேண்டும்.

89-ஐத் தாண்டிய பேரரசர்களால் பாதுகாக்கப்பட்டு, 449 நற்புலவர்களால் ஆராயப்பட்டு, 4440 ஆண்டுகள் நிலைத்திருக்கும் முதல் சங்கத் தமிழ், பிற்காலத்தில் வந்த 49 பாண்டிய அரசர்களால் பேணப்பட்டு. அகத்தியர், தொல்காப்பியர் முதலான கவிவாணர்களால் பேணப்பட்டு, பாண்டிய நாட்டைக் கடல் கொண்ட பொழுதும் தப்பி பிழைத்தது இடைச்சங்க தமிழ்.

இப்படிப்பட்ட சங்கப் பாடல்களை நமக்காக மிக அழகாக நம் கைகளில் அடுத்த தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கின்ற என் அன்பு தங்கை தமிழ்க்காரிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்என்றார்.

Read Also  செங்கோட்டையில் நல்ல பாம்பை கழுத்தில் போட்டபடி டீ குடித்த பெரியவர்.!

முனைவர் ரா. குறிஞ்சி வேந்தன் பேசும்போது…

அமெரிக்காவில் சித்ராவை அக்கா என்று அழைப்பது மரபு.

தமிழில் வடஅமெரிக்க கூட்டமைப்பில் பல சங்கங்கள் இருக்கின்றது. அனைத்து சங்கங்களையும் வழிநடத்துவது யார் என்றால் சித்ரா என்று கூறுவார்கள்.

உயர்தொழில்நுட்ப வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நவீன உலகில் இப்படி ஒரு நூலை நான் பார்த்ததில்லை.

நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இருந்து கொண்டு குறிஞ்சிப் பாட்டையும், குறுந்தொகையையும் தன்னுடைய புத்தகங்களில் கொண்டு வந்திருக்கிறார்.

ஆனால், இங்கு யாரும் இல்லையே என்பதில் ஆதங்கம் வருகிறது.

அனைத்து கவிஞர்களையும் நினைவுபடுத்தியிருக்கிறார்.

இந்த புத்தகங்களை படிக்கும் போது சித்ராவைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

அந்த கவிதையோடு சேர்த்து மருதுவின் ஓவியங்களையும் பார்க்கும் போது, தமிழ் பண்பாட்டை அழகாக கொடுத்திருக்கிறார்.

பாடங்களுக்காக அயல்நாட்டிற்கு செல்பவன். அப்படி போகும்போது பார்த்த அரிய குறிஞ்சி மலர் தான் சித்ரா.

இன்னும் மேலும், மேலும் அவர் எழுத வேண்டும் என்றார்.

முனைவர் கு.ஞானசம்பந்தம் பேசும்போது…

கார்த்திகேய சிவசேனாதிபதி திருவள்ளுவரைப் பற்றி அவர் யார் தெரியுமா? என்று கூறியதும், திடுக்கிட்டேன்.

ஏனென்றால், அவரை மட்டும் தான் விட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அவர் கூறியது போல் திருக்குறளின் காமத்துப் பாலை பாடப் புத்தகத்தில் வைக்க வேண்டும்.

மேலும், தொடர்ந்து 30 ஆண்டு காலமாக அழகர் விழாவை நேரடியாக வழங்கும் பாக்கியம் எனக்கு கிடைத்து வருவதில் மகிழ்ச்சி.

கடந்த 10 ஆண்டுகாலமாக சித்ராவை எனக்கு தெரியும்.

ஆனால், அதிகமாக பேச மாட்டார்கள்.

செயல்பாடு அதிகம் உள்ளவர்கள். இப்புத்தகங்கள் படிக்கும்வரை இவருக்கு தமிழ் மீது இவ்வளவு ஆர்வம் இருப்பது தெரியாது.

இப்புத்தகத்தை பல்கலைக் கழகங்களில் கொடுத்திருந்தால் நிச்சயமாக தனியாக டாக்டர் பட்டம் கொடுத்திருப்பார்கள்.

இதுவரை ஒரே ஒரு பெண் தான் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.

அதற்கு திருக்குறள் தீபலங்காரம் என்று பெயர்.

ஆனால், அவர் முழுமையாக முடிக்கவில்லை.

அதுபோல் பெண் உரை எழுதுவது மிகவும் அரிது.

சித்ரா வந்திருப்பது பாராட்டுக்குரியது.

இவரைப் போல் பெண்கள் பலரும் உரை எழுத முன்வர வேண்டும்.

பரிமேலழகர் இன்னொரு திருவள்ளுவர்.

குறுந்தொகையில் மோசிகனார் பாடலை எடுத்து எழுதியிருக்கிறார்.

குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்களை சேர்ப்பதற்கு உ.வே.சாமிநாதர் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

ஆனால், ஒவ்வொரு பூவையும் தொகுத்து எழுதியிருக்கிறார்.

20 வரிகளில் வர்ணிக்கும் அழகை ஒரே படத்தில் வரைந்திருக்கிறார் ஓவியர் மருது.

2000 வருடங்களுக்கு முன்பு குறுந்தொகையில் கபிலர் எழுதியதையும், பெண்ணின் மனநிலையையும், தன்னுடைய மனநிலையையும் எடுத்து சித்ரா அழகாக எழுதியிருக்கிறார்.

முனைவர் சித்ரா பேசும்போது...

இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைவரும் எனக்காக இங்கு வந்து பேசுவார்கள் என்று சிறிதும் நினைத்து பார்த்ததில்லை.

தமிழச்சி அக்காவையும்,

குறிஞ்சி அவர்களையும் பார்க்காமலேயே அவர்கள் மீது அன்பு கொண்டதற்கு காரணம் தமிழ் தான்.

குறிஞ்சி அவர்களிடம் தமிழ் கற்கும் ஆர்வம் வரும்.

ஓவியர் மருது மிகப் பெரிய ஆளுமை.

அவர் என்னுடைய படைப்புக்கு ஓவியம் தீட்ட ஒப்புக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

எழுதுவதை நிறுத்தக் கூடாது என்று அப்பாவாக துணையாக இருப்பது தினகரன் அண்ணா அவர்கள் தான்.

என்னுடைய தினகரன் அண்ணாவுக்கு தனி நன்றி என்றார்.

நிறைவாக அந்தரி பதிப்பகம் சார்பில் ஷோபா இரமேஷ்குமார் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

விழாவில், தமிழ்க்காரி (சித்ரா மகேஷ்) எழுதிய பூக்கள் பூக்கும் தருணம் என்ற புத்தகத்தை முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட முனைவர் கு.ஞானசம்பந்தம் பெற்றுக் கொண்டார்.

அடுத்து, காதல் கதை சொல்லட்டுமா? என்ற புத்தகத்தை முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட முனைவர் ரா.குறிஞ்சி வேந்தன் பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *