ராமஜெயம் கொலை வழக்கில் சரியான துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு! காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு.
சென்னை 23 ஏப்ரல் 2022 ராமஜெயம் கொலை வழக்கில் சரியான துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு! காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு.
ராமஜெயம் கொலை வழக்கில் சரியான துப்பு கொடுத்தால் ரூபாய்.50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் கே.என். ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று காலை, தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டு எடுக்கபட்டது.
இந்த வழக்கு தமிழ்நாடு காவல்துறை, சிபிசிஐடி, சிபிஐ என அனைத்து துறையும் விசாரணை நடத்திய நிலையில், துப்பு கண்டுபிடிக்க முடியவில்லை.,
இந்த வழக்கில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.
ராமஜெயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 294 வாகனங்கள் ஆய்வு, 2 ஆயிரத்து 910 மொபைல் போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தியவர்கள் விசாரிக்கப்பட்டிருந்தனர். இருந்த போதும் கொலையாளிகள் சிக்கவில்லை.
இதுதொடர்பான வழக்கின் கடந்த விசாரணையின் போது, மனுவை விசாரித்த நீதிபதி வி. பாரதிதாசன், சிபிசிஐடி, சிபிஐ அமைப்புகள், 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக்கூறி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்.பி.-யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்ட நீதிபதி, 15 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
விசாரணைக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்ததது.
அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர், சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது.
சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த ஆறு போலீசார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
43 அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்று கூறியதுடன், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 10ம் தேதி ஒத்திவைத்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று காவல்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ரூபாய்.50 லட்சம் பரிசு தரப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. ஜெயக்குமார், ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுத்தால் ரூபாய்.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், துப்பு கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி., ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2012-ஆம் வருடம் மார்ச் மாதம்-29 ஆம் தேதி தொழிலதிபர் திரு.K.N. ராமஜெயம் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலைய குஎண். 128/12 ச/பி 3468 மற்றும் 302 இ.த.சபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சிறப்பு புலனாய்வுக்குழுவில் புலன்விசாரணையில் இருந்து வருகிறது.
இவ்வழக்கு குறித்து கைபேசி தகவலை தீவிர பொதுமக்களிடமிருந்து அவ்வப்போது தகவல்கள், கடிதங்கள் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக பெறப்பட்டு வருகிறது.
அவ்வாறு பெறப்பட்ட இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது.
எனவே இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
இவ்வழக்கை துப்பு துலக்க சரியான தகவலை தருபவர்களுக்கு ரூபாய்.50 லட்சம் பண வெகுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எஸ்.ஜெயக்குமார், காவல் கண்காணிப்பாளர்: 9080616241
ஆர். மதன், காவல் துணைக் கண்காணிப்பாளர்: 9498120467, 7094012599 ( வாட்ஸ அப்)
மின்னஞ்சல் : [email protected]” குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கைபேசி எண்களுக்கு மின்னஞ்சலுக்கும் தெரியப்படுத்தலாம்.