ஹிஜாப் தடைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளைக் கைதுசெய்வதா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் |
சென்னை 21 மார்ச் 2022 ஹிஜாப் தடைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளைக் கைதுசெய்வதா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் |
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியத் தடைவிதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக அதன் நிர்வாகி தம்பி கோவை தம்பி ரகமத்துல்லாஹாவையும், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக அதன் நிர்வாகிகளான, தம்பி ஜமால் உஸ்மானி ஆகியோரையும், அதே கோரிக்கையை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொருளாளர் தம்பி சாதிக் பாட்ஷாவையும் திமுக அரசு கைது செய்து சிறைப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நாட்டை ஆளும் கொடுங்கோல் பாஜக அரசால் அச்சுறுத்தலுக்கும், அடக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது உரிமைகள் பறிக்கப்படும் நிலையில், அதற்கெதிராகப் போராடி அறச்சீற்றத்தையும், உள்ளக்குமுறலையும் வெளிப்படுத்துகிற வேளையில், இசுலாமியப்பெருமக்களுக்குத் துணைநிற்காது அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
அரசதிகாரத்தின் மூலமோ, ஆதிக்கத்தின் மூலமோ ஒடுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு, பாதிக்கப்பட்டு நிற்கிற மக்களின் பக்கம் நிற்பதே அறம். அதுவே சமூக நீதியுமாகும்!
அவ்வாறு, ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு, சட்டத்தின் வாயிலாகவே வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இசுலாமிய மக்களின் பக்கம் நின்று, அவர்களுக்காகக் குரலெழுப்ப வேண்டிய திமுக அரசு, அதற்கு நேர்மாறாக அவர்கள் மீதே அடக்கு முறையை ஏவிவிடுவது ஏற்கவே முடியாத எதேச்சதிகாரப்போக்காகும். அநீதிக்கெதிரான தங்களது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆத்திரத்தில் வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு ஐயா ஜார்ஜ் பொன்னையா, அண்ணன் தடா ரஹீம் போன்றவர்களைக் கைது நடவடிக்கைக்குட்படுத்தி, சிறைப்படுத்தும் திமுக அரசு, சமூகப்பூசலை உருவாக்கும்விதமாகத் தொடர்ச்சியாகப் பேசி வரும் எச்.ராஜா, சுப்ரமணியசுவாமி போன்ற பாஜக தலைவர்கள் மீது கைவைக்கத் தயங்குவதேன்? வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டும்கூட தில்லை தீட்சிதர்களைக் கைதுசெய்ய மறுப்பதேன்? எமது இசுலாமியச்சொந்தங்களுக்கு ஒரு நீதி! அநியாயம் செய்திடும் இந்துத்துவக்கொடுங்கோலர்களுக்கு ஒரு நீதியா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? வெட்கக்கேடு!
ஆகவே, ஹிஜாப் தடைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கோவை ரகமத்துல்லாஹ், தம்பி ஜமால் உஸ்மானி உள்ளிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற்று. உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.