சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம்- நயினார் நாகேந்திரன்

சென்னை 01 ஜூன் 2022 சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் நயினார் நாகேந்திரன்!

புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும்.

அ.தி.மு.க.வில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம்.

அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று தி.மு.க. கூறியது.

ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது, இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை.

பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.

மத்திய அரசு என்று கூறுவதை தி.மு.க.வினர் பெருமையாக கருதுகின்றனர்.

தி.மு.க. தங்களை பெருமைப் படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர, மக்கள் பிரச்சினையை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை

தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

Read Also  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை கேடு கெட்டவர் என்றும் குஷ்பு விமர்சனம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்வர் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கையில் உள்ள துண்டு சீட்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானது என்று பிரதம மந்திரியை வைத்துக்கொண்டு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை குறித்து பேசியது ஒரு சாட்சி.

ஜி.எஸ்.டி. இழப்பு நிலுவைத் தொகை தமிழகத்திற்கு ஜூன் மாதம் மட்டும் தான் பாக்கி உள்ளது.

கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தான் அருகதை உண்டு.

ஏனென்றால் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்த போது அதை எதிர்த்து வழக்குப் போட்டது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தான்.

அதை பாராளுமன்றத்தில் எதிர்த்தது அடல் பிகாரி வாஜ்பாய் தான்.

தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் கச்சத்தீவு நமக்கு வந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தாங்கள் தான் முயற்சி செய்தோம் என்று பொய் பி ரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் தற்போது பிரதம மந்திரி முன்னிலையில் கச்சத்தீவு குறித்து பேசி நாடகம் நடத்தியுள்ளார்.

கச்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சி தலைவர் அதாவது முதல்வருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை.

தமிழ் மொழியை வழக்கிலும் என்று கூறிக்கொண்டு பிற மொழியை வெறுக்கின்ற வெறுப்பு அரசியல் தமிழகத்தில் நடைபெறுகிறது.

இதனை தி.மு.க. கைவிட வேண்டும்.

தமிழ் மொழிக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை.

Read Also  ஹிஜாப் தடைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளைக் கைதுசெய்வதா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் |

மொழிகளுக்கு இடையே உள்ளது தேசிய மாடல். அதை தான் பா.ஜ.க. செய்து வருகிறது.

பிறமொழிகளை எதிர்ப்பது திராவிட மாடல்.

இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படாது.

பா.ஜ.க.வின் 8 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பொதுமக்களிடையே எடுத்து கூறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும்.

அதுவரை பா.ஜ.க.வின் போராட்டமானது தொடரும்.

மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படாமலேயே அரசு அதிகாரிகள் நிதி முறைகேடு செய்துள்ளனர்.

இதுதான் திராவிட மாடல். ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சுட்டுக் கொன்ற போது உண்ணாவிரதம் என்ற பெயரில் நான்கு மணி நேரம் நாடகம் போட்டது கருணாநிதி தான்.

அது தான் தற்போது தமிழ் சமுதாயத்தையே பாதித்துக் கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட லாக்கப் டெத் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகிறது.

இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா? தமிழ்நாடு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்சியாக நடந்து வருகிறது,

அதற்கு முடிவு கட்ட வேண்டும். இருபத்தி நான்கு மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டி பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *