மதுக் கயவர்களின் கூடாரமாக மாறிவரும் புராதான சின்னத்தை பாதுகாக்க கோரிக்கை!

சென்னை 13 ஜூன் 2022 மதுக் கயவர்களின் கூடாரமாக மாறிவரும் புராதான சின்னத்தை பாதுகாக்க கோரிக்கை!

பல நூற்றாண்டுகள் பழமையான நினைவுச் சின்னம் மதுக் கயவர்களின் கூடாரமாக மாறிவருவது வரலாற்று ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளாது.

திருநாதர் குகைக் குன்றுகளில் கிபி 4 – 5-ஆம் நூற்றாண்டுகளில் சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களின் அமர்ந்த நிலை இரண்டடுக்குச் சிற்பங்களும், முதிர்ந்தநிலை பிராமி எழுத்து முறையிலிருந்து, வட்டெழுத்தாக தமிழ் எழுத்துகள் வளர்ந்த, மாறுதல் அடைகிற காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டு இங்குதான் முதன் முதலில் காணப்படுகிறது.

திருநாதர் குன்றுகள், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், செஞ்சிக் கோட்டைக்கு வடக்கே உள்ளது.

இம்மலையை சிறுகடம்பூர் மலையென்றும், இப்பகுதியை சிம்மபுரி என்றும் அழைப்பர். ‘ஐ’ எனும் தமிழ் எழுத்து, திருநாதர் குன்று கல்வெட்டில்தான் முதலில் காணப்பட்டது.

இதனால் இம்மலை தமிழுக்கு எழுத்து தந்த மலை எனும் சிறப்பு பெற்றது.

இங்குள்ள ஒரு கல்வெட்டு, சந்திரநந்தி ஆசிரியர் எனும் சமணத்துறவி 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீடுபேறு பெற்றார் என்கிறது.

மற்றொரு கல்வெட்டு, இளையபட்டாரகர் எனும் சமணத்துறவி முப்பது நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறது. ஆனால் சமீபகாலமாக நினைவுச் சின்னமாக போற்றப்படக்கூடிய இந்த குன்றுகளில் மதுக்கயவர்கள் அமர்ந்து அட்டகாசம் செய்துவருகின்றனர்.

இதனால் மலை குன்றுகளுக்கு நடுவே, மதுபாட்டில்கள், செருப்புகள் மற்றும் குப்பைகளால் சூழப்பட்டுள்ளது.

இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, புராதான சின்னமான திருநாதர் குன்றுகளை தூய்மைப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *