அன்று கைது செய்ய வாருங்கள் என சவால் விட்டார்.. இன்று விழுப்புரத்தில் சிவி சண்முகம் கைது.
சென்னை 07 ஏப்ரல் 2022 அன்று கைது செய்ய வாருங்கள் என சவால் விட்டார்.. இன்று விழுப்புரத்தில் சிவி சண்முகம் கைது.
விழுப்புரம்: சொத்து வரி உள்பட பெரும்பாலான திமுக அரசின் மக்கள் விரோத திட்டங்களை கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது செய்யப்பட்டார்.
தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், அம்மா கிளீனிக் உள்ளிட்ட அதிமுக கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி 200 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏற்கெனவே கொரோனாவால் மக்கள் அவதியடைந்து ஊரடங்கு உள்ளிட்டவை திரும்ப பெற்று கொண்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்த நிலையில் புதிதாக ஒரு சுமையை மக்கள் மீது திமுக திணிப்பதாக அதிமுக குற்றம்சாட்டியது.
சொத்து வரி விலை உயர்வை திரும்ப பெறுமாறு அதிமுக, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் நடந்தது. சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், அம்மா கிளீனிக் உள்ளிட்ட அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக கிடப்பில் போட்டுவிட்டது.
மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ 1000 உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்துவதாக பொய் கூறுகிறது. கொரோனாவால் மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது சொத்துவரியை 200 சதவீதம் அளவுக்கு உயர்த்தினால் எப்படி என்ற கேள்வியை எழுப்பினார். பழைய பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் ஆர்ப்பாட்டத்தை விட்டு கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் சிவி சண்முகம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவரை கைது செய்வதாக போலீஸார் மைக்கில் கூறினர். இதையடுத்து போலீஸ் வாகனத்தில் அவரை ஏற்றி சென்ற போது அந்த வாகனத்தை அதிமுகவினர் தடுத்தனர். பின்னர் சிவி சண்முகம் அவர்களை கலைந்து போக சொல்லி போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதையடுத்து சிவி சண்முகம் ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
கள்ள ஓட்டு போட்ட நபரை அரைநிர்வாணமாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அவரது கைதை கண்டித்து அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திமுக அரசு செய்த தவறை சுட்டிக் காட்டிய ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர்.
கைதுக்கு அதிமுக என்றைக்கும் அஞ்சியதே இல்லை.
பலமுறை சிறை பார்த்தவர்கள்தான் அதிமுகவினர்.
என்னை கைது செய்ய வாருங்கள்.
தயாராக இருக்கிறேன் என சிவி சண்முகம் சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.