தமிழகத்தில் வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா? தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து.!

சென்னை 22 நவம்பர் 2022 தமிழகத்தில் வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு பலனா? பாதிப்பா? தொழில் முனைவோர், பொதுமக்கள் கருத்து.!

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

கட்டிட தொழில்களில் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு வந்தவர்கள் இன்று அனைத்து இடங்களிலும் இடம்பிடித்து வருகிறார்கள்.

வடமாநிலக்காரர்கள்

தென் மாவட்டங்களை சேர்ந்த பல தொழில் நிறுவனங்களில் முன்பு எல்லாம் மண்வாசனையை நுகர முடியும்.

அதாவது அங்கு வேலை செய்யும் ஆண், பெண் இருபாலரும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

அவர்கள் பேசுகிற தமிழே அதை அடையாளம் காட்டும்.

இன்று அந்த நிறுவனங்களில்கூட திக்கித்திக்கி இந்தி கலந்து தமிழ் பேசுகிற வட மாநிலத்தவரை காண முடிகிறது.

அதாவது பானி பூரி விற்பதில் தொடங்கி, கட்டிட வேலைகள், மெட்ரோ பணிகள், ஓட்டல் வேலைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், இறைச்சி கடைகள், மீன் வெட்டுதல், முடி வெட்டுதல் என அனைத்து வேலைகளுக்கும் வந்துவிட்டனர்.

சென்னை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து தொழில்களிலும் பரவி விட்டனர்.

திணித்துக்கொள்கிறோம்

இந்தி திணிப்பை எதிர்த்துவரும் நாம், இந்திக்காரர்களை நமக்கு நாமே திணித்து கொண்டிருக்கிறோம்.

இதை ஆதங்கப்பட்டோ, பொறாமைப்பட்டோ கூறவில்லை.

அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை நாம் அங்கீகரித்துத்தான் ஆகவேண்டும்.

குறைந்த சம்பளம் என்றாலும் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள்.

அதை வரவேற்றுத்தான் தீரவேண்டும்.

நம்மவர்கள் என்ன செய்கிறார்கள்?

பசி வயிற்றில் இருந்தால் தானே அவர்களுக்கு வேலையில் பக்தி வரும்? இலவசங்கள் அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டதாக யாரை கேட்டாலும் சொல்கிறார்கள்.

அர்ப்பணிப்பு இல்லை

எந்த வேலை என்றாலும் நம்மவர்கள் கூடுதல் சம்பளம் எதிர்பார்க்கிறார்கள்.

அதே வேளை குறைந்த நேரம் மட்டுமே வேலை பார்க்கிறார்கள். அர்ப்பணிப்பு குணம் குறைந்து போய்விட்டது.

‘இஷ்டம் இருந்தால் வேலை தா! இல்லை என்றால் போ!’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள். கிராமங்களில்கூட இந்த நிலைதான் இருக்கிறது.

அதனால்தான் நம்மவர்கள் இருந்தும் வடமாநில தொழிலாளர்களுக்கு நாமே சிவப்பு கம்பளம் விரிக்க நேருவதாக சொல்கிறார்கள்.

இதுபற்றி பொதுமக்களும், தொழில் முனைவோர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதை காண்போம்

Read Also  மதுக் கயவர்களின் கூடாரமாக மாறிவரும் புராதான சின்னத்தை பாதுகாக்க கோரிக்கை!

சுணக்கம் ஏற்படுத்துவதில்லை

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பாஸ்கரன்:-

கட்டிட தொழில்களில் வடமாநிலத்தவர்கள் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நேரத்திற்கு வரும் அவர்கள் வேலையை முடிக்க கால தாமதம் ஆனாலும் அதை முடித்து விட்டு தான் செல்கின்றனர்.

வேலையிலும் சுணக்கம் ஏற்படுத்துவதில்லை. கடினமான வேலையும் செய்கின்றனர். அவர்கள் சம்பளமும் குறைவாக தான் வாங்குகிறார்கள்.

ஆண்டுக்கு ஒன்று அல்லது 2 முறை தான் ஊருக்கு செல்வதால் வேலையிலும் தொய்வு ஏற்படுவதில்லை.

இதன் மூலம் குறித்த மாதத்திற்குள் வீடுகளை கட்டி முடிக்க முடிகிறது.

இந்தி மொழி தெரியாததால் சில விஷயங்களை சரியாக விளக்க முடியாதது தான் பிரச்சினையாக உள்ளது.

தலைவாசல் பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் சரவணன்:-

தலைவாசல் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பதாலும், மற்றவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட சற்று குறைவாக வாங்குவதாலும் பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் இவர்களை வேலைக்கு நியமித்து வருகின்றனர்.

கடினமான வேலையாக இருந்தாலும் முகம் சுழிக்காமல் பார்க்கின்றனர்.

மேலும் அவர்கள் அங்கேயே குடும்பத்துடன் தங்குவதால், ஏதாவது அவசர வேலை என்றால் உடனடியாக அழைத்து அந்த வேலையை முடிக்க ஏதுவாக இருக்கிறது.

இதுதவிர அவர்கள் அடிக்கடி விடுமுறை எடுக்காததால் தொழிலில் பாதிப்பு ஏற்படாது.

கூடுதல் நேரம்

தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் பெருமாள்:-

தற்போது ஓட்டல் வேலைக்கு தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் குறைந்து வருகிறது.

இதனால் ஓட்டலில் மாஸ்டர், சப்ளையர் உள்ளிட்ட வேலைக்கு கூடுதலாக வட மாநில தொழிலாளர்களை அமர்த்தி உள்ளோம்.

இவர்கள் இங்கு தங்கி வேலை செய்வதால் எங்களுக்கு குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு தயார் செய்து கொடுக்க முடிகிறது.

அதேபோல் இரவில் கூடுதல் நேரம் ஓட்டல் இயக்க ஏதுவாகவும் இருக்கிறார்கள்.

மற்ற தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது கூலி சற்று குறைவாக இருப்பதால் வியாபாரம் குறையும் நாட்களில் சமாளிக்க முடிகிறது.

சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த பர்னீச்சர் உற்பத்தியாளர் பாலாஜி:-

சேலம் மாவட்டத்தில் நமது ஊரை சேர்ந்த தொழிலாளர்களை விட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Also  நிலவில் கால் பதித்தவர் விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின் 93 வயதில் திருமணம்.!!!

வடமாநிலத்தவர்களை சேர்ப்பதால் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. தொடக்கத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் நேரம் பார்க்காமல் வேலை பார்த்தனர்.

ஆனால் அவர்களில் பலர் தற்போது நேரம் பார்த்து தான் வேலை பார்க்க தொடங்கி விட்டனர்.

கொடுத்த வேலைகளை செய்து முடிக்கின்றனர். குறிப்பாக அவர்கள் ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் வேலை பார்ப்பது கிடையாது.

ஏனென்றால் அவர்களை பெரும்பாலான நிறுவனத்தில் உடனடியாக வேலைக்கு சேர்த்து கொள்கின்றனர்.

மேலும் அவர்களது குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை அல்லது சம்பளம் கொடுக்க தாமதம் ஆனாலோ யாருக்கும் தெரியாமல் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து காலி செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

இதனால் தொழில் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது.

போதிய வருமானம்

சேலம் சத்திரம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் பீகாரை சேர்ந்த குமார்சேட்:-

பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி சேலம் வந்தேன். தற்போது இங்கு டீக்கடை நடத்தி வருகிறேன். இதில் எனக்கு போதிய வருமானம் கிடைப்பதால் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

ஆண்டுக்கு ஓரிரு முறை குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு வருவேன்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதால் எங்களை போன்ற பலர் இங்கு வந்து வேலை பார்க்கின்றனர்.

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக்:-

சேலம் மாவட்டத்துக்கு வட மாநிலங்களை சேர்ந்தவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் கட்டிட வேலை, ஓட்டல், சாலை பணிகள் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் சாலையோரங்களில் பானிப்பூரி கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலர் மளிகை கடை உள்ளிட்ட கடைகள் நடத்தி வருகின்றனர். இதுதவிர மாவட்டத்தில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் பலர் சொந்த வீடு வாங்கி இங்கேயே குடியேறி விட்டனர். வட மாநிலத்தவர்கள் வருகையால் இங்கு வசித்து வரும் பலருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடமாநிலத்தவர்களில் சிலர் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு சொந்த மாநிலங்களுக்கு தப்பிச்சென்று விடுகின்றனர். இதனால் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

மாத ஊதியம்

பழைய இரும்பு கடையில் வேலை பார்க்கும் பீகாரை சேர்ந்த சிவா:-

Read Also  இயல்பை விட இந்த வருடம் கூடுதல் வெப்பம்: வானிலை மையம் எச்சரிக்கை !!

எங்களது ஊரில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்துக்கு வந்து இங்கு வேலை பார்த்து வருகிறேன். எனக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதை சேமித்து வைத்து சொந்த ஊருக்கு பணம் அனுப்பி வருகிறேன். ஊரில் ஏதாவது விசேஷம் என்றால் ஊருக்கு செல்வேன். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் எனக்கு திருமணம் நடந்தது. எனவே விடுமுறைக்கு சென்றுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் வந்து வேலை பார்த்து வருகிறேன்.

வங்கி ஊழியர் ஆதங்கம்

இது ஒருபுறம் இருக்க ரெயில்வே, வங்கிகள், தபால் துறை, தொலை தொடர்புத்துறை (பி.எஸ்.என்.எல்.) என அனைத்து மத்திய அரசு துறைகளிலும் வடமாநிலத்தவர்கள் ஆதிக்கமே அதிக அளவில் இருக்கிறது.

வங்கிகளில் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் குறித்து பெயர் சொல்ல விரும்பாத வங்கி ஊழியர் ஒருவர் கூறியதாவது:-

கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கள்ளக்குறிச்சி பகுதியில் வங்கி மேலாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை அனைவரும் இந்திக்காரர்கள் பணியாற்றியதால், சரியாக தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்களே அந்த வங்கியை பூட்டி சீல் வைத்த சம்பவம் நடந்து உள்ளது. வட மாநிலங்களில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களில் வங்கி தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை அவர்களே தயாரிப்பதாக ஒரு தகவல் உள்ளது. மேலும் அவர்களின் தாய்மொழியான இந்தியில் தேர்வு எழுதும் வாய்ப்பும் உள்ளதால், வங்கி துணை அதிகாரிகள் பணிகளில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தேர்வாகின்றனர்.

இவ்வாறு தேர்வாகி வரும் வடமாநிலத்தவர்களுக்கு வங்கிகள் குறித்த புலமையும், ஆங்கில புலமையும் குறைவாகவே இருக்கும். இதனால் தமிழக வங்கி பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலும், வங்கிகளின் தலைவர்கள், செயல் இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் வடமாநிலத்தவர்களே இருப்பதால் பதவி உயர்விலும் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வடமாநிலத்தவர்கள் வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தமிழ் மொழி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் வேலை பார்க்க முடியாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஆனால், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளின் குளறுபடிகளால் இது போன்று தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் வேலை பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *