நடிகர் விவேக் வாழ்ந்த சாலைக்கு “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டார்!
சென்னை 02 மே 2022 நடிகர் விவேக் வாழ்ந்த சாலைக்கு “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டார்!
தமிழ் சினிமா கண்டெடுத்த நகைச்சுவை நடிகர்களில் தனக்கென்று தனி வழியை கடைப்பிடித்தவர் சின்னக் கலைவாணர் விவேக்.
தனது நகைச்சுவையால் தனது ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த அவர் மரக்கன்றுகள் நடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.
சாதி, மத, மூடநம்பிக்கைகளை எதிர்த்து தனது காமெடி காட்சிகளின் வழியே சாமானியர்களுக்கும் நல்ல செய்தியை, விழிப்புணர்வை கொண்டு சென்ற அவர் இறுதி நாட்கள் வரை சமூகப் பணி மேற்கொண்டார் நடிகர் விவேக்.
சாலிகிராமத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு நடிகர் விவேக் இல்லம் இருக்கிறது.
நடிகர் விவேக் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை 26- ஏப்ரல்- 2022 அன்று நேரில் சந்திந்து நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி வேண்டுகோள் விடுத்த நிலையில், அவரது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்…
திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர், கலைமாமணி, பத்மஸ்ரீ விவேக் கடந்த 17.04.2021 அன்று இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.
அன்னாரின் நினைவாக அவர்தம் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-10, பகுதி-29, வார்டு-128-ல் அமைத்துள்ள பத்மாமதி நகர் பிராதன சாலையினை அப்பகுதி வாழ் மக்கள். சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் “சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்திட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், மறைந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் சின்னக் கலைவாணர் கலைமாமணி, பத்மஸ்ரீ திரு. விவேக் அவர்களின் நினைவாக, அவர்தம் புகழினை பறை சாற்றும் வகையில் அவர் மறைத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அன்னாரின் நினைவாக அவர்தம் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலையினை மாமன்றத்தின் பின்னேற்பு அனுமதிக்குட்பட்டு “சின்னக் கலைவாணர் விவேக் சாலை” என பெயர் மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் மாண்புமிகு மேயர் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
விவேக்கின் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதை திரையுலகினரும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.