அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால் , போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்!

சென்னை 17 மே 2022 அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால் , போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் , தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை.

விடியா அரசு , அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால் போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் மாவட்டம் , வேப்பூர் வட்டம் , பூலாம்பாடி காலனி கிராமத்தில் வசித்து வரும் திரு . கார்த்திக் என்பவர் கடந்த 7 – ஆம் தேதி காலை தனது 5 வயது பெண் குழந்தை லட்சிதாவை வேப்பூரில் உள்ள தாரா மெடிக்கல்ஸ் & கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாகவும் , அங்கு குழந்தைகள் நல மருத்துவர் என்றழைக்கப்படும் டாக்டர் சத்தியசீலன் சிகிச்சை அளித்ததாகவும் , சிகிச்சைக்குப்பின் அந்தப் பெண் குழந்தை லட்சிதா உயிரிழந்து விட்டதாகவும் , நாளிதழ்களிலும் , ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன.

இச்சம்பவம் குறித்து நல்லூர் வட்டார அரசு தலைமை மருத்துவர் தமிழரசன் தலைமையில் ஒரு குழு , குழந்தை லட்சிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சத்தியசீலனிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது , சத்தியசீலன் ஒரு போலி மருத்துவர் என்பது தெரிய வருகிறது.

விசாரணையின் போது சத்தியசீலன் தப்பி ஓடிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து , இந்த விசாரணையை மேற்கொண்ட மருத்துவர் தமிழரசன் வேப்பூர் காவல் நிலையத்தில் பெண் குழந்தை லச்சிதா இறப்பு குறித்தும் மற்றும் போலி மருத்துவர் சத்தியசீலன் மீதும் புகார் அளித்துள்ளார்.

Read Also  வரும் லோக்சபா தேர்தலில், கூட்டணி சேர்ந்து போட்டியிட, கமல் முடிவு செய்துள்ளார்.!!

அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வேப்பூர் காவல் துறையினர் போலி மருத்துவர் சத்தியசீலனை தேடிவருகின்றனர்.

தவறாக சிகிச்சை அளித்த தாரா மெடிக்கல்ஸ் & கிளினிக் மீது இதுவரை மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

காய்ச்சல் , சளி , இருமல் போன்ற சாதாரண நோய் வந்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவர்களிடம் சென்று , பணம் செலவு செய்து மருத்துவ சிகிச்சை பெற முடியாத ஏழை , எளிய , நடுத்தர மக்கள் , அவர்களின் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்

முதற்கட்டமாக 2000 அம்மா மினி கிளினிக்குகளை தமிழகமெங்கும் அம்மாவின் அரசு தொடங்கியது .

படிப்படியாக இதன் எண்ணிக்கையை உயர்த்தி , 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு அம்மா மினி கிளினிக் – கை துவக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது அம்மாவின் அரசு.

அம்மா மினி கிளினிக்குகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் பணியாட்களைத்தான் பணியமர்த்த வேண்டும் என்றும் தினமும் காலையும் , மாலையும் மினி கிளினிக் திறந்திருக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டது அம்மாவின் அரசு.

இதன்படி , முதற்கட்டமாக சுமார் 1900 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு , லட்சக்கணக்கான ஏழை , எளிய , நடுத்தர மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வந்தனர் .

செவிலியர் நியமனம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் , அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களே மாற்றுப் பணியில் பணியமர்த்தப்பட்டனர்.

மீதமுள்ள 100 கிளினிக்குகள் அமைக்கத் தேவையான இடத்தினை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது.

Read Also  திமுக அரசு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாமல் கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள்  பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் இந்த அரசு , அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியது.

இதனால் ஏழை , எளிய , நடுத்தர மக்கள் மீண்டும் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பூலாம்பாடி காலனியில் வசிக்கும் திரு .கார்த்திக்கும் தனது 5 வயது குழந்தை லட்சிதாவை , கட்டணம் குறைவு என்ற காரணத்தினால் போலி மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று தனது குழந்தையை இழந்துள்ளார்.

இதுபோல் இன்னும் எத்தனை பேர் சிகிச்சைக்கு பணம் இல்லாத சூழ்நிலையில் , குறைவான கட்டணத்தில் இது போன்ற போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று உடல் நலத்தை மேலும் கெடுத்துக் கொள்கின்றனரோ , உயிரையும் இழக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகின்றனரோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை இந்த விடியா அரசு அறிவித்தது.

என்ன ஆயிற்று இந்தத் திட்டம் ? இந்தத் திட்டத்தின்படி வேப்பூர் வட்டம் , பூலாம்பாடி காலனிக்கு மருத்துவர் குழு சென்றிருந்தால் இந்தக் குழந்தை உயிர் பிழைத்திருக்கும்.

மேலும் , இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டம் சரியாக செயல்படவில்லை என்பதைப் புரிந்துகொண்ட இந்த விடியா அரசு , அம்மா மினி கிளினிக் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

நகர்புறங்களில் நிறைய மருத்துவமனைகள் உள்ளன . ஆனால் , கிராமப்புறங்களில்

தான் ஏழை , எளிய மக்கள் சாதாரண காய்ச்சல் , சளி போன்ற உபாதைகளுக்குக்கூட அருகில் உள்ள நகர்புறங்களுக்குச் செல்ல வேண்டும்.

எனவே , அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும்.

Read Also  துக்ளக் பத்திரிகையின் 53-வது ஆண்டு விழாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறினார்.!

முந்தைய அம்மா அரசின் நல்ல திட்டங்களை பரிசீலித்து தொடர வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதை நினைவில் கொண்டு தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என்று வீம்பு பிடிக்காமல் மாண்புமிகு அம்மாவின் அரசு கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை முழுமையாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் , உயிரிழந்த பெண் குழந்தை லட்சிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் .

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *