15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா: மும்பையில் இன்று கோலாகல தொடக்கம்.. வெற்றி பெறுமா சென்னை அணி?
சென்னை 26 மார்ச் 2022 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று கோலாகல தொடக்கம்.. வெற்றி பெறுமா சென்னை அணி?
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. அதன்படி, 15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் தொடக்க லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகம் ஆவதால், அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் அனைத்தும் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, நவி மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டும் நடத்தப்பட உள்ளது.
இதேபோன்று 25 சதவீத பார்வையாளர்கள் போட்டியை நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை அணி இதுவரை 4 முறையும், கொல்கத்தா 2 முறையும் சாம்பியன்களாகி உள்ளன. இம்முறை ஜடேஜா தலைமையில் சென்னையும், ஷ்ரேயாஸ் தலைமையில் கொல்கத்தாவும் விளையாட உள்ளது. கடந்த ஆண்டு பைனலில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2020ல் டெல்லி கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் பைனல் வரை அணியை அழைத்துச் சென்றார். அதனால் கொல்கத்தா அணி மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. தலைமை பொறுப்பில் இருந்து தோனி விலகி, ஜடேஜா பொறுப்பேற்றுள்ளதால் சென்னை மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.