உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை உற்பத்தியாளர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.!!

சென்னை 17 நவம்பர் 2022 உயர்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை உற்பத்தியாளர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.!!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவின் பேரில் பால் கொள்முதல் விலை 05.11.2022 அன்று முதல் லிட்டருக்கு ரூ.3/- உயர்த்தியதை தொடர்ந்து அதற்கான தொகை பால் உற்பத்தியாளர்களுக்கு சென்றடைவதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் தலைமையில் ஆவின் பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மாவட்ட துணைப்பதிவாளர்கள் (பால்வளம்), அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்களுக்கு 17.11.2022 அன்று காலை 10.00 மணி அளவில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிட்டார்.
மேலும் இக்கூட்டத்தில், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட வாரியாக பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் நிலுவையில் உள்ள தணிக்கை அறிக்கை மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.

பால் மற்றும் பால் உபபொருட்களின் கடந்த மூன்று மாதங்கள் (ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்) விற்பனை விவரத்தினை ஒப்பிட்டு குறைந்த விற்பனை மேற்கொண்ட ஒன்றியங்களுக்கு விற்பனையை அதிகரிக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தினார்.

பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை தொடர்ந்து பால் கொள்முதல் அதிகரித்து வருவதையும், கொள்முதல் அளவினை மேலும் உயர்த்த அனைத்து மாவட்ட துணைபதிவாளர்கள் மற்றும் ஒன்றிய பொது மேலாளர்களுக்கு உத்தரவிட்டார்.
பால் விற்பனையை கூட்டும் விதமாக டீ கடை, ஓட்டல்கள், கேண்டீன்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களை பெற விற்பனை பிரிவு அதிகாரிகளுக்கு எடுத்துறைத்தார்.

Read Also  தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வழங்கப்பட்ட ஆலோசனைகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் மழை பொழிவு நாட்களில் பால் மற்றும் பால் உப பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க தமிழக முழுவதும், இதனை பால் பண்ணைகள் கட்டுப்பாட்டு அறைகள் மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.

மழைக்காலங்களில் கால்நடைகளை பாதிக்கும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease) போன்ற நோய்கள் குறித்தும் அவற்றை தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
எதிர்வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி போன்ற பால் உபபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக ஆவின் குல்பி தயாரிப்பினை ஈரோடு, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட ஒன்றியங்களில் அதிகப்படுத்தவும், சென்னை அம்பத்தூர் மற்றும் மதுரை ஐஸ்கிரீம் அலகுகள் முழு உற்பத்தி திறனையும் பயன்படுத்தி விற்பனையை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. A.கார்த்திக் இ,ஆ.ப., அவர்கள், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர்.ந.சுப்பையன் இ.ஆ.ப., அவர்கள், இணை நிர்வாக இயக்குநர் திருமதி. கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள், அனைத்து மாவட்ட துணைப்பதிவாளர்கள் (பால்வளம்), அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள் மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *