பணமதிப்பிழப்பு பிரதமர் மோடி தப்ப முடியாது  கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.!

சென்னை 04 ஜனவரி 2023 பணமதிப்பிழப்பு பிரதமர் மோடி தப்ப முடியாது  கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு.!

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது.

அதற்கு மாற்றாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது.

மக்கள் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகள் ஒரே நாளில் செல்லாது என்று அறிவித்ததால், பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள்.

இதனை எதிர்த்து விவேக் நாராயண் சர்மா உள்ளிட்ட 57 பேர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம், “மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்ததும் சரி.

செயல்படுத்திய முறையும் சரி.

அதனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்” எனத் தீர்ப்பளித்தது.

இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒன்றிய அரசு 2016 நவம்பர் 8 இல் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று 6 ஆண்டுகள் கழித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதில், நீதிபதி பி.வி.நாகரத்தினம்மா பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தது செல்லாது என்ற மாறுபட்ட தீர்ப்பை மிகத் தெளிவாக வழங்கியிருக்கிறார்.

தீர்ப்பு வழங்கிய மற்ற 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு திட்டத்திற்கான அரசின் நோக்கம் எதுவாக இருந்தாலும், மக்கள் படும் அவதி வேதனையாக உள்ளது.

அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

Read Also  ஊடகங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் தமிழக பாஜக அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்.!

பணமதிப்பிழப்பை பிரதமர் மோடி அன்று அறிவித்த போது சட்டப்படி பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கலில் விரிவான கலந்தாய்வு 8 மாதங்களாக நடந்ததாகக் கூறியிருக்கிறது.

ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 2016 நவம்பர் 8-க்கு முன்பு 2 மாதங்கள் வரை ரிசர்வ் வங்கி கவர்னராக டாக்டர் ரகுராம் ராஜன் தான் பொறுப்பில் இருந்தார்.

அவர் ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான நிலை கொண்டிருந்தார்.

அதற்கு அடுத்து பொறுப்பிற்கு வந்த டாக்டர் உர்ஜித் படேலும் அதே நிலை தான் எடுத்திருந்தார்.

அதனால், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியபடி விரிவான கலந்தாய்வு நடந்தது என்பது உண்மைக்குப் புறம்பான கருத்து என்பது அம்பலமாகியுள்ளது.

ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஏனோதானோ என்று அவசர கோலத்தில் முடிவெடுத்து தனது சுயாட்சி தன்மையை கேலிக்குரியதாக ஆக்கிவிட்டது.

இதன்மூலம் ரிசர்வ் வங்கியின் தனித்தன்மை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி விட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த 2016 நவம்பர் 8 ஆம் தேதி அன்று மொத்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி. அதில் திரும்ப வந்தது ரூ. 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி. திரும்ப வராத நோட்டுகளின் மதிப்பு ரூ.12,877 கோடி. ஆனால், இதற்கு மாறாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆன செலவு ரூ.12,777 கோடி. இவ்வகையில் ரூ.100 கோடி மட்டுமே அரசுக்கு பலனாக கிடைத்திருக்கிறது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் 99 சதவீத ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்து விட்டன.

Read Also  துக்ளக் பத்திரிகையின் 53-வது ஆண்டு விழாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறினார்.!

கருப்புப் பண, கள்ளப் பண சந்தைக்காரர்கள் தங்களிடமிருந்த இருந்த கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்கு தான் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவி செய்திருக்கிறது.

மேலும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முயன்றவர்களில் 140 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

35 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.

சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் 50 சதவிகிதம் நசிந்து லட்சக்கணக்கான பேர் வேலை இழந்துள்ளனர். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது அப்பட்டமான ஒரு மக்கள் விரோதப் பேரழிவு நடவடிக்கை என்ற குற்றச்சாட்டில் இருந்து பிரதமர் மோடி தப்ப முடியாது.” என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *