ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்… 17 வயது சிறுமி தற்கொலையில் சிக்கிய கடிதம்.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்.!
சென்னை 17 நவம்பர் 2022 ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்… 17 வயது சிறுமி தற்கொலையில் சிக்கிய கடிதம்.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்.!
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற சிறுமி சேலத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்
பெரம்பலூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி தற்கொலையில் கடிதம் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கைகளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிறுமிக்கு அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காதலித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 17 வயது சிறுமியை செப்டம்பர் 3ம் தேதி அவரது விருப்பபடி பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டனர். அதன் பின்னர், மணிகண்டனின் தந்தை ராமசாமி மற்றும் அவரது தம்பி மகன் மாரிமுத்து ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி மதுபோதையில், சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் அவரது வீட்டிற்கு சென்றும் “எனது மகனுக்கு உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து வைப்பேன்” என்று கூறி மிரட்டியதோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி கடந்த மாதம் 26ம் தேதி வீட்டில் இருந்த களைக்கொல்லி விஷ மருந்தினை அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே இந்த சம்பவத்தில் சிறுமி விஷம் குடித்த சில தினங்களிலேயே கைகளத்தூர் போலீசார் ராமசாமி மற்றும் மாரிமுத்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில், 17 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியின் மரணத்திற்கு காரணமான அனைவரும் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும், அதுவரையில் உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிறுமி விஷம் அருந்தும் முன்பு அவளது கைப்பட எழுதியதாக கூறப்படும் கடிதம் தங்களிடம் உள்ளதாக கூறி அந்த கடிதத்தையும் வெளியிட்டுள்ளனர்.
அதில், “31.8.22 அன்று பக்கத்து வீட்டு ராணி என்பவர் என்னை அழைத்து பேசி என்னுடைய போன் நம்பரை பொய் சொல்லி வாங்கி வைத்து கொண்டார். நான் பாத்ரூம் சென்றபோது பக்கத்து வீட்டில் உள்ள ராணி, ராமசாமி, மணி ஆகிய மூவரும் மயக்க மருந்து அடித்து கடத்தி சென்றனர் .
நான் சென்றது ஒரு ஆட்டோ மற்றும் அதில் இருவர் இருந்தார்கள். அரைமயக்கத்தில் கல்யாணம் செய்து நான் விருப்பப்பட்டு கல்யாணம் செய்தாக சொல்ல வைத்தார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் கொலை செய்வேன் என்றும் என்னை தவறாக படம் பிடித்து வைத்து கொண்டும் மிரட்டினார்கள். என் குடும்பத்தையும் கொலை செய்வேன் என்று மிரட்டினார்கள். மறுநாள் சமயபுரம் கோயிலுக்கு சென்றதாக சொல் என்று சொல்லி காட்டாயப்படுத்தினார்கள்.
இல்லையொன்றால் தவறாக படம் எடுத்து வைத்து இருப்பதை உன் அண்ணனுக்கு அனுப்பினால் உன் குடும்பம் தற்கொலை செய்து கொள்ளும் என்று மிரட்டினர். மணி என்பவர் தான் மிரட்டினார். மனகுழப்பத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் சென்று கோயிலுக்கு சென்றதாக சொன்னேன். தினமும் என்னை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மிரட்டுகிறார்கள்.
ராமசாமி என்பவர் மேஜர் ஆனதும் உன்னை கடத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார். எனது சாவிற்கு முழுக்க முழுக்க ராணி, ராமசாமி, மாரிமுத்து, மணி ஆகியோர் தான் காரணம். என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் காரணம் இல்லை.
என் தற்கொலைக்கு இவர்கள் நால்வர்கள் தான் காரணம். என் குடும்பத்தை துன்புறுத்த வேண்டாம் . என் குடும்பத்தார் என்னை துன்புறுத்தவில்லை. மாரிமுத்து என்பவர் செல்போனில் உள்ள போட்டோ கண்பித்து மிரட்டுகிறார். என அக்கடிதத்தில் எழுதப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறும்போது, சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து, கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தல் செய்து, வீடியோ, புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டியுள்ளனர். இதனால்தான் தற்கொலை செய்து கொண்டாள்.
சம்பந்தபட்டவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.