ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் தமிழக அரசுக்கு  ஓபிஎஸ் கடும் கண்டனம்!!

சென்னை 09 மே 2022 ராஜா அண்ணா மலைபுரம் இளங்கோ தெருவில் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் தமிழக அரசுக்கு  ஓபிஎஸ் கடும் கண்டனம்!!

சென்னை உள்ள ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ தெருவில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் “குடிசை பகுதி” என அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் திமுக அரசிற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சென்னை இராஜா அண்ணாமலைபுரம் , இளங்கோ தெருவில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் ‘ குடிசைப் பகுதி ‘ என அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தல்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் மீனவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும் சிதிலமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.

பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இவற்றிற்கெல்லாம் முற்றிலும் முரணான வகையில் , சென்னை , இராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 250 – க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது .

மேற்படி வீடுகள் குறித்து திரு . ராஜிவ் ராய் என்பவர் தொடர்ந்த வழக்கினை ( வழக்கு எண் . 3273/2008 ) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , 13-03-2008 நாளிட்ட தனது தீர்ப்பில் , பசுமைவழிச் சாலையையும்
காமராஜர் சாலையையும் இணைக்கும் 40 அடி அகலம் கொண்ட பக்கிங்காம் கால்வாயின் தெற்குக் கரையை ஆக்கிரமித்துள்ள சென்னை -28 , ஆர்.ஏ. புரம் , இளங்கோ தெருவைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டது.

Read Also  இலங்கை அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் இலங்கை பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா?

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து , பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் திரு . செல்வம் மற்றும் ஏனையோர் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு ( 25401-25403 / 2009 ) தாக்கல் செய்தனர்.

இந்த மனுவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இவர்களுக்காக ஒக்கியம் துரைப்பாக்கத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும் , அந்தப் பணிகள் முடிந்தவுடன் அவர்கள் அந்த இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் , வழக்கினை முடித்து வைத்தது.

இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை ( வழக்கு எண் . 844-846 / 2015 ) திரு . ராஜிவ் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதற்கு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் , மொத்தமுள்ள 625 குடியிருப்புகளில் 356 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள 259 குடியிருப்புகளைப் பொறுத்த வரையில் அவை அனைத்துமே இளங்கோ தெருவின் கிழக்குப் பகுதியில் அதாவது பக்கிங்காம் கால்வாய்க்கு எதிராக உள்ளது என்றும் , அவர்கள் 50 ஆண்டுகளாக அங்கு வசித்து வருவதாகவும் , அந்தப் பகுதி குடிசைப் பகுதி என்று 1973 ஆம் ஆண்டே அறிவிக்கை செய்யப்பட்டுவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவர்களை காலி செய்ய முடியவில்லை என்றும் 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் , இந்த வழக்கின் மனுதாரரான திரு . ராஜிவ் ராய் என்பவர் , பொது நலன் என்ற போர்வையில் சொந்த நலனுக்காக நீதிமன்றங்களை அணுகுகிறார் என்றும் தன்னுடைய சொத்து மதிப்பினை உயர்த்திக் கொள்வதற்காக இவ்வாறு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது .

இருப்பினும் , இந்த அவமதிப்பு வழக்கில் , ஆறு மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று 25-10-2021 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .

Read Also  அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால் , போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்!

இந்த வழக்கு மீண்டும் 4-2-2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 2022 ஏப்ரல் மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்று மாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது .

இதனையடுத்து பொதுப் பணித் துறை சார்பில் 259 குடும்பங்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டு அங்கு இப்போது இடிக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் கிட்டத்தட்ட 20 வீடுகள் இடிக்கப்பட்டு விட்டதாகவும் , திரு . கண்ணையா என்பவர் தீக்குளித்து இறந்து விட்டதாகவும் இது போதாதது என்று பக்கத்து தெருவில் உள்ள வீடுகளும் இடிக்கப்பட வேண்டுமென்று பொதுத் பணித் துறை உதவிப் பொறியாளர் கூறுவதாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் ஆகியோரின் அணுகுமுறை சரியில்லை என்றும் தகவல்கள் வருகின்றன .

மேற்படி பொருள் குறித்து அப்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கேள்வி எழுப்பிய போது அந்தப் பகுதி மக்களின் பாதுகாப்பிற்கு அரசு உரிய வழிவகை செய்யும் என நான் பதில் அளித்து இருந்தேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தவரை குடியிருக்கும் ஏழை மக்களை ஆதரிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது என்பதோடு அவர்களுடைய வீடுகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை  இராஜா அண்ணாமலைபுரம்  இளங்கோ தெருவில் மொத்தம் 625 குடியிருப்புகள் உள்ளன.

இதில் தெற்கு பக்கிங்காம் கரையை ஒட்டி இளங்கோ தெருவின் மேற்கில் 366 குடியிருப்புகள் உள்ளன.

கரைக்கு எதிராக , இளங்கோ தெருவின் கிழக்கே 259 குடியிருப்புகள் உள்ளன.

இதில் , இளங்கோ தெருவின் மேற்கில் உள்ள 336 குடியிருப்புகள் பக்கிங்காம் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்ததால் அவை அகற்றப்பட்டு விட்டன.

Read Also  ஆளும் கட்சி எம்.பி. உட்பட 3 பேர் உயிரிழப்பு 150-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்தார்!!

மீதமுள்ள 259 குடியிருப்புகள் இளங்கோ தெருவிற்கு கிழக்கே உள்ளன.

இந்தப் பகுதி குடிசைப் பகுதி என 1973 ஆம் ஆண்டே தமிழ்நாடு குடிசைப் பகுதி மேம்பாடு மற்றும் அகற்றுதல் சட்டம் , 1971 – ன்படி அறிவிக்கப்பட்டுவிட்டது .

இந்தப் பகுதிகளை De – notify செய்ய சட்டத்தில் வழிவகை இல்லை.

இதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அவர்களும் 9-3-2022 கடிதம் மூலமாக தெரிவித்து விட்டார்.

இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏழையெளிய மக்களுக்கு எதிராக வந்து விட்டது.

நான் இந்த அரசைக் கேட்டுக் கொள்வதெல்லாம் , தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடிப்புப் பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும் , இளங்கோ தெருவின் கிழக்கே உள்ள 259 குடியிருப்புகள் ‘ குடிசைப் பகுதி ‘என 1973 ஆம் ஆண்டே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்டு விட்டது என்பதையும் , மேற்படி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ததே தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தான் என்பதையும் அவர்கள் அனைத்து விதமான வரிகளையும் அரசாங்கத்திற்கு செலுத்தி வருகிறார்கள் என்பதையும் , அந்தக் குடியிருப்புகள் சாலையையோ அல்லது பக்கிங்காம் கால்வாயையோ ஆக்கிரமித்து கட்டப்படவில்லை  என்பதையும் அரசின் சார்பில் ஒரு மனு மூலம் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகத் தெரிவித்து ஏழையெளிய மக்கள் தொடர்ந்து அங்கேயே குடியிருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் , உயிரிழந்த கண்ணையாவின்  குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் , காவல் துறையையும் மீறி குடியிருப்பு வாசிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன் .

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *