காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி டிரான்ஸ் கதீட்டர் மூலம் வெற்றிகரமான சிகிச்சையில் சாதனை!
சென்னை 02 ஜூன் 2022 காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்றி டிரான்ஸ் கதீட்டர் மூலம் வெற்றிகரமான சிகிச்சையில் சாதனை!
82 வயதான முதியவருக்கு இரு இதய வால்வுகள் மாற்றப்பட்டதோடு பேஸ் மேக்கர் கருவியும் பொருத்தப்பட்டது
இந்தியாவில், இவ்வகையினத்தில் முதன் முறையாக ஒரு ஹைபிரிட் கேத்லேப் அறுவைசிகிச்சை அரங்கில் மேற் கொள்ளப்பட்ட சிகிச்சை செயல்முறை என்ற பெருமையைப் பெறுகிறது
- ஏற்கனவே பொருத்தப்பட்ட சர்ஜிக்கல் வால்வு சிதைவடையும் போது அல்லது காலப்போக்கில் மிகவும் குறுகியிருக்கும் போது ஒரு வால்வில் மற்றொரு வால்வு பொருத்தும் சிகிச்சை செய்யப்படுகிறது
- தொடக்கத்தில் அதிக இடர்வாய்ப்புள்ள நோயாளிகளுக்கு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட இந்த சிகிச்சை செயல்முறையை டிரான்ஸ்கதீட்டர் மூலம் செய்வது ஒரு சமீபத்திய நவீன முன்னேற்றமாகும்.
- அதிக இடர்வாய்ப்புள்ள மற்றும் சிக்கலான இச்செயல்முறையை மேற்கொள்ள ஹைபிரிட் கேத்லேப் அறுவைசிகிச்சை அரங்கே மிக பாதுகாப்பான இடமாகும்.
சென்னை, 2 ஜுன் 2022: ஒன்றுக்கும் அதிகமான இதய வால்வு பாதிப்பு நோயுள்ள 82 வயதான முதியவருக்கு வெற்றிகரமான சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதை தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு சிகிச்சை சங்கிலித்தொடர் நிறுவனமாகத் திகழும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை காவேரி மருத்துவமனை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. ஒரு டிரான்கதீட்டரைப் பயன்படுத்தி இரு “வால்வில் வால்வு” என்ற வால்வு மாற்று சிகிச்சை செயல்முறையானது இந்நாட்டில், இவ்வகையினத்தில் முதன் முறையாக செய்யப்பட்டிருக்கிறது.
குறைவான இதயத்துடிப்பு பிரச்சனையை சரிசெய்ய இதே செயல்முறையில் டிரான்ஸ்கதீட்டர் வழியாக ஒரு பேஸ்மேக்கர் கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது.
கோவையைச் சேர்ந்த 82 வயதாகும் திரு பாலகிருஷ்ணன், ஒன்றுக்கும் மேற்பட்ட இதயவால்வு பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். தீவிர பெருநாடிவாயில் கசிவு, இருதயத்தின் இடப்பகுதியில் உள்ள மிட்ரல் வால்வில் கசிவு மற்றும் முத்தடுக்கிதழ் வால்வில் மிதமான கசிவு ஆகிய பிரச்சனைகளோடு கடுமையான நுரையீரல் இரத்தஅழுத்தமும் (நுரையீரல்களின் தமனிகளிலும் மற்றும் இதயத்தின் வலது பகுதியிலும் அதிக அழுத்தம்) இவருக்கு இருந்தது. “கசியும் வால்வு நோய்” என்றும் அறியப்படுகின்ற இப்பாதிப்பில் இதயவால்வு முறையாக மூடாத நிலையில் இருப்பதால், இரத்தஓட்டத்தில் கசிவை ஏற்படுத்துகிறது; இதனால் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்வதற்கு இதயம் அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இந்நிலை தொடருமானால், காலப்போக்கில் இதய செயலிழப்பு அல்லது மாரடைப்பு ஏற்படக்கூடும்.
சென்னை காவேரி மருத்துவமனையின், இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். R. அனந்தராமன், இந்நோயாளியின் கடந்தகால பாதிப்பு வரலாறு குறித்து விளக்கமாக கூறியதாவது: “பெருநாடிவாயில் மற்றும் மிட்ரல் வால்வு ஆகிய இரண்டிலும் கடுமையான கசிவு பிரச்சனையோடு முத்தடுக்கிதழ் வால்விலும் மிதமான கசிவு பிரச்சனை இந்நோயாளிக்கு இருந்திருக்கிறது. 2012-ம் ஆண்டில் வால்வு மாற்று அறுவைசிகிச்சை இவருக்கு மேற்கொள்ளப்பட்டது. பெருநாடிவால்வு, 21 மி.மீ. பயோபுரோஸ்தடிக் வால்வைக் கொண்டும் மற்றும் மிட்ரல் வால்வு 31 மி.மீ. பயோபுரோஸ்தடிக் வால்வைக் கொண்டு மாற்றப்பட்டன. மிதமான பாதிப்பிருந்த முத்தடுக்கிதழ் வால்வு, அங்கு சரி செய்யப்பட்டது. இடது முன்புறத்திலுள்ள கீழ்நோக்கிச் செல்லும் தமனியின் முன்பகுதியில் ஒரு பைபாஸ் ஒட்டு சிகிச்சையும் இவருக்கு செய்யப்பட்டிருந்தது. இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்த காலகட்டத்தில் இவரது இதயத்தின் செயல்பாடு கணிசமாக குறைந்திருந்தது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு தொடர் மருத்துவ சிகிச்சை இவருக்கு அவசியமாக இருந்தது.”
இந்த ஆண்டில் சுவாசப் பிரச்சனைகளை இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 4 முதல் 6 மாதங்கள் காலஅளவில் இது மிகவும் மோசமானதால் அவரால் எழுந்து நடக்கவோ அல்லது முதுகை சாய்த்து சமநிலையில் படுக்கவோ இயலவில்லை. “எங்களது மருத்துவக் குழுவினர் அவரது தற்போதைய நிலையையும், அவரது கடந்தகால மருத்துவ வரலாறையும் தீவிரமாக ஆய்வு செய்தனர். இவருக்குப் பொருத்தப்பட்டிருந்த பெருநாடி வாயில் மற்றும் மிட்ரல் வால்வுகள் மிகவும் குறுகியிருப்பதை எக்கோ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவரது முதிர்ந்த வயதையும், குறைந்திருக்கும் இதய செயல்திறன் மற்றும் கடந்தகால அறுவைசிகிச்சையையும் கருத்தில் கொண்டபோது இதிலுள்ள மிக அதிக இடர்வாய்ப்புகளின் காரணமாக அதே மாதிரியான அறுவைசிகிச்சையை மீண்டும் செய்ய இயலாது என்ற முடிவு எட்டப்பட்டது. இதயவியல் நிபுணர்கள் குழு இது குறித்து நடத்திய முழு கலந்துரையாடலுக்குப் பிறகு இதுவே இவரது உடல்நிலைக்கு உகந்த சரியானத் தீர்வாக இருக்கும் என்று ஒருமித்தக் கருத்து எட்டப்பட்டதால் பெருநாடி வால்வு மற்றும் மிட்ரல் வால்வு ஆகிய இரண்டுக்கும் ஒரு டிரான்ஸ்கதீட்டரைப் பயன்படுத்தி (மிகக் குறைவான ஊடுருவலுடன்) “வால்வில் வால்வு” மாற்று சிகிச்சையை நாங்கள் இம்முதியவருக்கு செய்தோம். கூடுதலாக, இவரது இதயத்தில் இரத்த ஓட்டத்தில் அடைப்பு பிரச்சனை இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதற்கு தீர்வுகாண டிரான்ஸ்கதீட்டர் பேஸ்மேக்கரைப் (மைக்ரா) பயன்படுத்தி ஒரு பேஸ்மேக்கரையும் இவருக்கு நாங்கள் பொருத்தினோம்.” என்று டாக்டர். அனந்தராமன் மேலும் கூறினார்.
ஒரு “வால்வில் வால்வு” என்ற டிரான்ஸ்கதீட்டர் சிகிச்சை செயல்முறை, இப்போது சரியாக செயல்படாத திசு வால்வைக் கொண்டு திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டிருக்கின்ற நபர்களுக்காக பரிந்துரைக்கப்படுகிறது. வழக்கமான அறுவைசிகிச்சையுடன் ஒப்பிடுகையில், இப்புதிய சிகிச்சை செயல்முறையில் மிக வேகமாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இந்த குறிப்பிட்ட நேர்வில், இம்முதியவர், சிகிச்சை செயல்முறைக்குப் பிறகு மூன்றாவது நாளில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்போது அவர் முன்பைவிட நன்றாக இருக்கிறார்.
சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயலாக்க இயக்குனருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இச்சிகிச்சையின் வெற்றி குறித்துப் பேசுகையில், “ஒரு டிரான்ஸ்கதீட்டர் மூலம் வால்வில் வால்வை மாற்றுகின்ற சிகிச்சை செயல்முறை மேற்கத்திய நாடுகளில் அதிகளவு பின்பற்றப்படுகிறது மற்றும் திறந்தநிலை இதய அறுவைசிகிச்சையில் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் அதிக இடர்வாய்ப்புள்ள நோயாளிகளுக்கு மிக பாதுகாப்பான சிகிச்சையாக இருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனினும், டிரான்ஸ்கதீட்டர் சிகிச்சை செயல்முறைகளில் அதிக அளவில் பிற இடர்களும், சிக்கல்களும் வரக்கூடும். நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் குழு மற்றும் தேவைப்படுகின்ற சரியான உட்கட்டமைப்பு வசதியுள்ள மருத்துவமனை ஆகியவற்றால் மட்டுமே இத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இச்சிகிச்சை செயல்முறையானது, இதயவியல் இடையீட்டுச் சிகிச்சையில் அனுபவம் மிக்க மருத்துவர் மற்றும் அவரது திறன்மிக்க குழுவினரின் நிபுணத்துவத்தின் கீழ் மிக பாதுகாப்பான இடமான ஹைபிரிட் கேத்லேப் அறுவைசிகிச்சை அரங்கில் செய்யப்பட்டிருக்கிறது. நோயாளியின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு எமது இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர். அனந்தராமன் மற்றும் அவரது குழுவினர் எடுத்திருக்கும் சிறப்பான முயற்சிகளை நான் மனமார பாராட்டுகிறேன்” என்று கூறினார்.