1050 கோடி ரூபாயை டிபிஜி க்ரோத் மற்றும் டெமாசெக் நிறுவனங்களிலிருந்து முதலீட்டு நிதியாகத் திரட்டியிருக்கும் டாக்டர் அகர்வால் ஹெல்த்கேர் லிமிடெட்!

சென்னை 11 மே 2022 1050 கோடி ரூபாயை டிபிஜி க்ரோத் மற்றும் டெமாசெக் நிறுவனங்களிலிருந்து முதலீட்டு நிதியாகத் திரட்டியிருக்கும் டாக்டர் அகர்வால் ஹெல்த்கேர் லிமிடெட்

  • கண் மருத்துவத்துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிதி திரட்டல் செயல்பாடாக இந்த முதலீட்டுச்சுற்று அமைந்திருக்கிறது. 
  • அடுத்த 3-4 ஆண்டுகளில் 105 மருத்துவமனைகளாக இருக்கும் தனது வலையமைப்பை இரட்டிப்பாக்கி 200 மருத்துவமனைகளாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.


சென்னை / 2002, மே 10 : சென்னையைத் தளமாகக்கொண்டு இயங்கும் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட் (DAHCL), ரூபாய் 1050 கோடி என்ற சாதனை அளவு முதலீட்டு நிதியை திரட்டுவதை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. யுஎஸ்-ஐ சேர்ந்த முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான டெக்ஸாஸ் பசிபிக் குரூப் (TPG)-ன் நடுத்தர சந்தை மற்றும் வளர்ச்சி ஈக்விட்டி நிறுவனமான TPG க்ரோத் மற்றும் DAHCL-ல் ஏற்கனவே முதலீடு செய்திருக்கும் சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட உலகளாவிய முதலீட்டு நிறுவனமான டெமாசெக் ஆகியவற்றிலிருந்து இந்நிதி முதலீடு பெறப்பட்டிருக்கிறது. கண் மருத்துவ தொழில்பிரிவில் இந்தியாவின் மிகப்பெரிய நிதி திரட்டல் செயல்பாடான இந்த முதலீட்டுச் சுற்று, டாக்டர் அகர்வால்ஸ்-ன் விரிவாக்கத் திட்டங்களுக்கு கணிசமான முதலீட்டை வழங்கும், அத்துடன் தற்போது இருந்துவரும் முதலீட்டாளரான ADV பார்ட்னர் தனது நிதி முதலீட்டை விலக்கிக்கொள்வதற்கும் இது வழிவகுக்கும். 2019-ஆம் ஆண்டில் டெமாசெக் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து 270 கோடி ரூபாய் முதலீட்டை இந்நிறுவனம் திரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர், புரொபஸர், டாக்டர். அமர் அகர்வால் இது குறித்து கூறியதாவது : ‘‘கடந்த 6 ஆண்டுகள் காலஅளவில் எமது முதலீட்டாளரான ADV பார்ட்னர்ஸ் உடன் எங்களது பயணம் மிகச்சிறப்பானதாக இருந்தது. டிபிஜி க்ரோத் மற்றும் டெமாசெக் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம்; எமது நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை இதன்மூலம் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறோம். உலகளவில் புகழ்பெற்ற இத்தகைய பிரபல முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு, மக்களுக்கு தரமான கண் பராமரிப்பு சிகிச்சையை வழங்க வேண்டுமென்ற எமது குறிக்கோளையும் செயல்பாட்டையும் மேலும் வலுப்படுத்துகிறது; இந்நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம் அடிப்படையிலான மருத்துவ சிகிச்சையை எடுத்துச்செல்ல இது உதவும். இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் எமது செயலிருப்பை விரிவாக்கவும் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் பராமரிப்பு சிகிச்சைக்கு மிக சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் புதிய முதலீட்டுத்தொகை பயன்படுத்தப்படும்.’’

Read Also  இருதய நோயால் 28.1% பேர் உயிரிழப்பு ஆண்களில் 15.6% பேருக்கு சர்க்கரை நோய் மத்திய சுகாதார அமைச்சர் தகவல்.!!

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 60-க்கும் அதிகமான மருத்துவமனைகளை தனது வலையமைப்பில் சேர்த்திருப்பதன் மூலம் நாடெங்கிலும் தனது விரிவாக்கத்தையும், வளர்ச்சியையும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது. 105 மருத்துவமனைகள் என்ற தனது தற்போதைய வலையமைப்பை அடுத்த 3-4 ஆண்டுகளில் 200 மருத்துவமனைகளாக விரிவாக்கம் செய்ய இம்முதலீட்டைப் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. நிதியாண்டு 2022 ரூபாய் 700 கோடிக்கும் அதிகமான மொத்த வருவாயை இந்நிறுவனம் பதிவு செய்திருந்தது.

டிபிஜி க்ரோத்-ன் நிர்வாக இயக்குநர் திரு. அங்குர் தடானி இது குறித்து பேசுகையில், “நிறுவனத்தின் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் சேவை மேம்பாட்டை திறம்பட முன்னெடுத்துச் செல்ல டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் அனுபவமும், செயல்திறனும் கொண்ட நிர்வாகக் குழுவோடு சேர்ந்து செயலாற்றப்போவது குறித்து நாங்கள் பெருமகிழ்ச்சி கொண்டிருக்கிறோம். இந்தியாவில் சுகாதார பராமரிப்புத்துறை டிபிஜி-க்கு முக்கிய கூர்நோக்கம் செலுத்தும் துறையாக இருக்கிறது. பார்வைத்திறன் குறைபாடு மிக அதிகமாக இருக்கின்ற இந்நாட்டில் இன்றியமையாத கண் பராமரிப்பு சிகிச்சையை வழங்குவதில் முதன்மை வகிக்கும் தனியார்துறை கண் பராமரிப்பு சங்கிலி தொடர் நிறுவனத்தோடு கூட்டாண்மையாக செயல்படுவது குறித்து நாங்கள் பெருமைகொள்கிறோம்,” என்று கூறினார்.

ஏடிவி பார்ட்னர்ஸ்-ன் இணை நிறுவனரும், அதன் நிர்வாக இயக்குநருமான திரு. சுரேஷ் பிரபாலா கூறியதாவது, ‘‘கடந்த 6 ஆண்டுகள் காலஅளவில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தோடு மிகச்சிறப்பான கூட்டாண்மை உறவை நாங்கள் கொண்டிருந்தோம். எதிர்காலத்தில் மிகப்பிரம்மாண்டமான வளர்ச்சிக்கான சாத்தியத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இக்குழுமம் சிறப்பான திறன் கொண்டதாக இருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். இந்நிறுவனம் மென்மேலும் தொடர்ந்து வெற்றிச்சாதனைகளை நிகழ்த்த நாங்கள் அதன் நிர்வாகத்தை வாழ்த்துகிறோம்.’’

Read Also  பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்!

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைமை செயலாக்க அதிகாரி டாக்டர். அடில் அகர்வால் கூறியதாவது, ‘‘ஏடிவி பார்ட்னர்ஸ் உடன் எமது பயணம் சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்திருக்கிறது. எமது தொலைநோக்கு குறிக்கோள் மீது அவர்கள் வைத்திருந்த வலுவான நம்பிக்கைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். டெமாசெக் நிறுவனத்துடன் மீண்டும் ஒருமுறை இணைவதில் நாங்கள் அதிக மகிழ்ச்சியடைகிறோம்; அதே நேரத்தில் டிபிஜி க்ரோத் குழுவினரோடு இணைந்து ஒரு புதிய பயணத்தை தொடங்குவதை நாங்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறோம். இந்த முதலீட்டு குழுமங்கள் இரண்டுமே உடல்நல பராமரிப்பில் கணிசமான அனுபவத்தை கொண்டிருக்கின்றன. எமது நிறுவனத்தை தரத்திலும், அளவிலும் இன்னும் உயர்த்த உதவுவதற்கு அவர்களது நிபுணத்துவத்தை பயன்படுத்திக்கொள்வதில் நாங்கள் துடிப்போடு இருக்கிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் எமது வலையமைப்பை இரட்டிப்பாக்க இப்புதிய முதலீடுகள் எங்களுக்கு உதவும். மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரப்பிரதேஷ், தெலங்கானா போன்ற முக்கிய சந்தைகளில் நிறுவனங்களை கையகப்படுத்துவதை நாங்கள் தீவிரமாக மேற்கொள்வோம்; அத்துடன் நாடெங்கிலும் எங்களது வலையமைப்பை வேகமாக விரிவாக்கம் செய்வதிலும் நாங்கள் ஈடுபடுவோம். 15 மருத்துவமனைகளை ஏற்கனவே நாங்கள் நடத்திவரும் ஆப்பிரிக்கா கண்டம், எமது விரிவாக்க செயல்பாடுகளுக்கு மற்றுமொரு முக்கிய பகுதியாக இருக்கும். கென்யா, மொசாம்பிக், தான்சானியா மற்றும் கானா போன்ற நாடுகளில் எமது செயலிருப்பை நாங்கள் இன்னும் ஆழமாக்கவிருக்கிறோம்.’’

வேதா கார்பரேட் அட்வைசர்ஸ் மற்றும் அவென்டஸ் கேப்பிடல் ஆகியவை இந்த முதலீட்டு பரிவர்த்தனைக்கு அகர்வால்ஸ் குழுமத்திற்கு ஆலோசகர்களாக செயலாற்றியிருக்கின்றனர்.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் மொத்தத்தில் 105 மருத்துவமனைகள் என்ற மாபெரும் வலையமைப்பை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் தற்போது கொண்டிருக்கிறது. இந்தியாவில் 12 மாநிலங்களிலும் மற்றும் உலகளவில் 11 நாடுகளிலும் இக்குழுமத்தின் மருத்துவமனைகள் சேவையாற்றி வருகின்றன. 400-க்கும் அதிகமான கண் மருத்துவ நிபுணர்கள் மற்றும் 3,000 பணியாளர்கள் இதன் மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுக்கு இவர்கள் சிகிச்சை அளித்திருக்கின்றனர்; தரமான கண் மருத்துவ சிகிச்சை வழங்கலோடு நின்றுவிடாமல், கண் மருத்துவவியல் மற்றும் தொடர்புடைய செயல்தளங்களில் கல்விசார்ந்த மற்றும் ஆராய்ச்சி செயல்திட்டங்களையும் இக்குழுமம் மேற்கொண்டு வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *