ஆற்றில் குளித்தபோது ஏழு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தோரின் நிவாரண உதவி முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை 06 ஜூன் 2022 ஆற்றில் குளித்தபோது ஏழு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தோரின் நிவாரண உதவி முதலமைச்சர் அறிவிப்பு!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கெடிலம் ஆற்றில் குளித்தபோது ஏழு பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது – உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவி மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (வயது 18) த/பெ. சங்கர், பிரியா (வயது 19) த/பெ.குணாளன், மோனிஷா (வயது 16) த/பெ. அமர்நாத், நவநீதம் (வயது 20) த/பெ. மோகன், சுமிதா (வயது 18), த/பெ. முத்துராமன், காவியா (எ) திவ்யதர்ஷிணி (வயது 10), த/பெ. ராஜ்குரு, மற்றும் பிரியதர்ஷிணி (வயது 15), த/பெ. ராஜ்குரு ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த ஏழுபேரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.