தமிழ் நாடு முழுவதும் பத்திரப்பதிவு சர்வர் செயலிழப்பு; பொதுமக்கள் அவதி!

சென்னை 02 செப்டம்பர் 2022 தமிழ் நாடு முழுவதும் பத்திரப்பதிவு சர்வர் செயலிழப்பு; பொதுமக்கள் அவதி!

தமிழகம் முழுவதும் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகங்களில் வீடு, நிலங்கள் விற்பனை, தான செட்டில்மெண்ட், அடமானம், உயில், பரிவர்த்தனை போன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்கும், திருமணங்களை பதிவு செய்வதற்கும் தினந்தோறும் ஏராளமானோர் வருகின்றனர்.

கடந்த 2019ம் ஆண்டு பத்திரப்பதிவு அலுவலகங்கள் முழுவதும் ஆன்லைன் மயமாக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, சொத்தினை வாங்குபவர், விற்பவர் விவரங்கள் அனைத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்த பிறகு எந்த நாளில் பதிவு செய்ய விரும்புகிறோமோ அந்த நாளில் முன்பதிவு செய்து பதிவுக்கு வர வேண்டும்.

இந்த மென்பொருளை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் இதற்கான சர்வரையும் டி.சி.எஸ். நிறுவனமே மேற்கொள்கிறது.

இந்நிலையில், அவ்வப்போது இந்த சர்வரில் கோளாறு ஏற்பட்டு பத்திரப்பதிவு மிகவும் மெதுவாக நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தற்போது தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறை 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னை, வேலூர், கடலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய ஒன்பது மண்டலங்களும் அதிலுள்ள 575 சார்பதிவகங்களும் ஒரே சர்வரில் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த கோளாறு ஏற்படுவதாக மென்பொருள் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சர்வர் கோளாறு பிரச்னையால் வில்லங்க சான்று பெறுதல், சான்றிட்ட நகல் பெறுதல் போன்ற கோரிக்கைகளுக்காக ஆன்லைனில் மனு செய்தோரும் காத்திருக்கின்றனர்.

Read Also  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

ஆகவே, தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை மறு சீரமைப்பு செய்து மண்டல வாரியாக சர்வர் அமைத்து அவற்றை கிளவுட் சிஸ்டம் மூலம் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலவும் சர்வர் கோளாறு பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *