தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உயர்கல்வி செலவை அரசு ஏற்கும் அரசாணை வெளியீடு!

சென்னை 02 செப்டம்பர் 2022 தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உயர்கல்வி செலவை அரசு ஏற்கும் அரசாணை வெளியீடு!

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்த மாணவ-மாணவியரின் உயர்கல்விக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்ற அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

ஐஐடி, இந்திய அறிவியல் கழகம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில், அரசுப் பள்ளிகளில் (6ம்  வகுப்பு முதல் பிளஸ் 2 வரை) படித்த மாணவ-மாணவியர் இளநிலைப் பட்டப் படிப்பதற்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்று 2022-2023ம் ஆண்டுக்கான நிதி அறிக்கையில் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்புக்கான அரசாணையை உயர்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இது  குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணை: சட்டப் பேரவையில் 2022-2023ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ‘‘அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவ-மாணவியர் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, இந்திய அறிவியல் கழகம், எய்ம்ஸ் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவ-மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், இளநிலை பட்டப் படிப்பு படிப்பதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும்.

அரசுப் பள்ளி மாணவர்கள்  இந்த உதவியைப் பெறலாம்’’.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பக் கல்வி ஆணையரின் கருத்துருவை, அரசு நன்கு ஆய்வு செய்து அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இளநிலைப் பட்டப் படிப்பு படிப்பதற்கான முழுச் செலவையும் வழங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளை வகுத்து அரசு ஆணையிடுகிறது.

Read Also  தமிழக முதல்வர் இன்று ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புக்கு நேரில் சென்று அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.!

அதன்படி, இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெற்ற மாணவர்கள் 6ம்  வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும். மேற்கண்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் அந்த நிறுவனங்களில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை ஆணை, கல்வி நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் ‘போனபைட்’ சான்று மற்றும் அக்கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விவரங்களுடன் அந்த மாணவர்களின் சொந்த மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவர், விண்ணப்பித்த மாணவர்களின் அனைத்து சான்றுகளையும் சரிபார்த்து, மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற  மாணவர்களின் படிப்புக்காக ஆகும் மொத்த செலவின விவரங்களுடன், தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு பரிந்துரை செய்து கருத்துரு அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பும் கருத்துருவை பரிசீலித்து,  மொத்த செலவினத்தை கணக்கீடு செய்து உரிய நிதி ஒதுக்கீடு ஆணை பெற அரசுக்கு, தொழில் நுட்ப கல்வி இயக்ககம் கருத்துரு அனுப்ப வேண்டும். 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களுக்கான செலவினத் தொகை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்துக்கு மின்னணு சேவை மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

அதேபோல, இந்த நேர்விலும் மாணவர்களுக்கான செலவை நேரடியாகவே மாணவர்களின் வங்கி கணக்கில் மின்னணு சேவை மூலம் செலுத்த தொகை   வழங்கப்படும். இந்த திட்டத்தை கண்காணிக்கவும், சரிபார்த்தலை விரைவாக முடிக்கவும்  தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம்   இணைய தளம் உருவாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *