காலை சிற்றுண்டி திட்டம்.. மாணவர்களோடு அமர்ந்து மாணவர்களுக்கு ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிய தமிழக முதல்வர்!
சென்னை 15 செப்டம்பர் 2022 காலை சிற்றுண்டி திட்டம் மாணவர்களோடு அமர்ந்து மாணவர்களுக்கு ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிய தமிழக முதல்வர்!
மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தின் போது, மாணவர்களோடு மாணவராக அமர்ந்து சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், ஊட்டிவிட்டு அன்பை பரிமாறினார்.முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளையொட்டி, மதுரையில் நெல்பேட்டை பகுதியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள்,
எம்பிக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நெல்பேட்டை பகுதியில் உள்ள காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கான நவீன சமையல் கூடத்தைப் பாா்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கான காலை உணவை சுவைத்து ஆய்வு செய்தார். அப்போது சமையல் கூடம் சுகாதாரமாக இருக்கிறதா, சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான சிற்றுண்டியை சமையல் கலைஞர் வழங்க, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுவைத்து பார்த்து பாராட்டினார்.
இதனைத்தொடர்ந்து சமையல் கூடத்தில் இருந்து மாணவர்களுக்கு சிற்றுண்டி கொண்டு செல்லும் வாகங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் சிற்றுண்டிகள் கொண்டு சென்ற வாகனங்களை திறந்து பார்வையிட்டார்.இதன் பின்னர் சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து மாணாக்கரோடு ஒன்றாக அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களோடு காலை சிற்றுண்டியை சாப்பிட்டார். அப்போது அருகில் இருந்த மாணாக்கர்களுக்கு சிற்றுண்டியை ஊட்டிவிட்டு, மழலைகளுடன் அன்பை பரிமாறிக் கொண்டார்.இதனைத்தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே, அவர்களுடன் சில வார்த்தைகள் பேசியது காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களோடு அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.,