நீட் விலக்கு மசோதா விவகாரம்: தேவைப்பட்டால் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை 28 ஏப்ரல் 2022 நீட் விலக்கு மசோதா விவகாரம்: தேவைப்பட்டால் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று நீட் விலக்கு மசோதா தொடர்பாக 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது:-

ஏழரைக் கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவு கடந்த 210 நாட்களாக கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது.

நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட அந்தச் சட்டமுன்வடிவு கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

அப்படிப்பட்ட வேளையில், அதே ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடக்கக்கூடிய தேநீர் விருந்து என்ற விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது என்பது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், சட்டமன்ற மாண்பினை மேலும் சிதைப்பதாகவும் அமைவதாலேயே, அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இயலாத நிலை இந்த அரசுக்கு ஏற்பட்டது.

இதுகுறித்து கவர்னருக்கு நானே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்.

அதில் அதற்கான விவரங்கள் எல்லாம் விரிவாகத் தரப்பட்டிருக்கின்றன.

கவர்னருடன் எங்களுக்கு எந்த விதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால், தனிப்பட்ட முறையில் தமிழக கவர்னருக்கும், தமிழ்நாடு முதல்-அமைச்சரான எனக்கும் மிகமிகச் சுமூகமான உறவு இருக்கிறது.

நேரில் பேசும்போது, இந்த ஆட்சியின் செயல்பாடுகளை மிகவும் பாராட்டி அவர் பேசியிருக்கிறார்.

Read Also  ஆறு, குளங்களில் குளிக்கச் செல்லும் சிறுவர் சிறுமியர்  இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் முதலமைச்சர் வேண்டுகோள்!

நாங்கள் ஆட்சி நடத்தக்கூடிய விதம் குறித்து பொது மேடையிலேயே, கவர்னர் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

அது ஊடகங்களில் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

கவர்னர் பழகுவதற்கு அதிகம் இனிமையானவர்.

எங்களுக்கு அதிகமான மரியாதையை அவர் தருகிறார்.

கவர்னர் என்ற முறையில் அந்தப் பதவிக்குரிய மரியாதையை நாங்களும் அளிக்கிறோம்.

அளித்துக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து அளிப்போம்.

இது அரசியல் எல்லைகளைக் கடந்த பண்பாடு.

இந்தப் பண்பாட்டை எப்போதும், எந்த நிலையிலும் நாம் அனைவரும் காக்க வேண்டும்; காப்போம்.

தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைக்கக்கூடிய பாராட்டுகளை விட, தமிழ்நாட்டுக்குக் கிடைக்கக்கூடிய நன்மையும், பலனுமே முக்கியமானது.

அதனையே முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

இந்தச் சட்டமன்றத்தின் மாண்பை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து, நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்தாக வேண்டும்.

அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல.

இந்தச் சபையின் மாண்புக்கு விரோதமானது ஆகும்.

கவர்னர் அனுப்பி வைக்காதது என்பது எனக்கல்ல இந்தத் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கக்கூடிய செயலாகும்.

நான் இந்தப் பேரவைக்குச் சொல்வதெல்லாம் சொல்ல விரும்புவதெல்லாம், கடந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் நான் எத்தனையோ வலிகளையும், அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன். அது எனக்கு ஒரு பொருட்டல்ல.

இந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்தது எல்லாம் வலிகளையும், அவமானங்களையும், புகழ்ச்சிகளையும், பாராட்டுரைகளையும் புறந்தள்ளிவிட்டு “என் கடன், பணி செய்து கிடப்பதே”என்று செயல்படுவதுதான்.

அப்படித்தான் நான் செயல்பட்டு வருகிறேன்.

“பொது வாழ்க்கையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதுதான் தலையாய கடமை’’ என்பதே அண்ணா, கலைஞர் வழியிலே நான் கற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாடமாகும்.

Read Also  ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு!

அந்த வழியில்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைக்கக்கூடிய வலி, அவமானங்களைப் பொறுத்துக் கொண்டு, அதனால் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கும் என்றால், புகழ்ச்சிகளையும், பாராட்டுரைகளையும் நான் புறந்தள்ளி விட்டு, அவமானங்களையும், வலிகளையும் தாங்கிக் கொள்ளவே நான் எப்போதும் தயாராக இருப்பேன்.

தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த உணர்வாக இருக்கக்கூடிய நீட் விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் முக்கியம்.

அதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

எனவே, தனிப்பட்ட ஒரு நபருக்கான மரியாதைகள், புகழுரைகள் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தொடர்ந்து நான் முயற்சித்துக் கொண்டேயிருப்பேன்.

தமிழ்நாடு முதலமைச்சராக இந்தச் சட்டமன்றத்தின், நூற்றாண்டு கண்ட சட்டமன்றத்தின் மாண்பைக் காக்கும் பொறுப்பும் என்னுடையது என்று புரிந்து கொண்டதால்தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டது.

தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளைத் தொடர்ந்து நாம் அனைத்து மன்றங்களிலும் எதிரொலிப்போம். அவர்களது உரிமையை நிலைநாட்டுவோம்.

கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாவை, இந்தச் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் 8-2-2022 அன்று நிறைவேற்றி, மீண்டும் கவர்னருக்கு நாம் அனுப்பி வைத்தோம்.

இன்றுடன் 70 நாட்கள் ஆகின்றன.

இந்த நிலையில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க கவர்னர் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அது தொடர்பான நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, தேவைப்பட்டால், அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்பதை இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்.

Read Also  பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்திட நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர்  பிரதமர்  மோடி அவர்களுக்கு கடிதம்!

இவ்வாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் பேசினார்.

https://twitter.com/thenewswingz?t=DvXrOtBNPBXQVuHjYpq2cw&s=09

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *